நுவரெலியா, மீப்பிலிமனாவில் வாடகை வீட்டில் தங்கியிருந்த தம்பதியினர் மூடிய அறைகளுக்குள் பா பி கியூ இயந்திரங்களை பயன்படுத்தி நச்சு வாயுவை சுவாசித்ததால் இன்று (03/11) அதிகாலை உயிரிழந்தனர் என நுவரெலியா பிரதேச உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் சந்தன பஸ்நாயக்க தெரிவித்தார்.
அவிசாவளையைச் சேர்ந்த அத்தம்பதியினர், நுவரெலியா, மீப்பிலிமனாவில் ஒரு சுற்றுலா விடுதியின் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் அந்த விடுதி கட்டி முடிக்கப்படும் வரை அவர்கள் தற்காலிகமாக அருகில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு தங்கியுள்ளனர்.
நுவரெலியா பகுதியில் நிலவிய கடும் குளிரின் காரணமாக அந்த தம்பதியினர் அறையில் பா பி கியூ அடுப்பு ஒருபுறம் எரிந்துகொண்டிருக்க, அவர்கள் உறங்கச் சென்றிருந்தனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை, உறவினர்கள் அத்தம்பதியினரின் தொலைபேசிக்கு அழைத்தபோதும், அவர்கள் அழைப்புகளுக்குப் பதிலளிக்காததால், அப்பகுதி கிராமசேவகர் அதிகாரியிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.
அதனையடுத்து, கிராமசேவகர், குறித்த வீட்டுக்குச் சென்று, இருவரும் உயிரிழந்து கிடப்பதைப் பார்த்து, அவர் நானுஓயா பொலிஸ் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
அத்தம்பதியரில் உயிரிழந்த ஆண், கப்பலொன்றின் மாலுமி (வயது 52) என்றும், அவரது மனைவிக்கு 46 வயது என்றும் அவர்கள் இருவரும் பா பி கியூ செய்து சாப்பிட்டுவிட்டு அடுப்பை அணைக்காமல் உறங்கியதால் இந்த விபரீதம் நேர்ந்துள்ளது எனவும் விசாரணைகளை நடத்தி வரும் நானுஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, குளிரான பிரதேசங்களான நுவரெலியா செல்லும் சுற்றுலாப்பயணிகள், பா பி க்யூ சமைத்த பிறகு அல்லது குளிருக்காக அந்த அடுப்பை மூடிய அறைக்குள் வைத்து உறங்கும்போது பா பி க்யூவில் உள்ள கறிகள் அல்லது நிலக்கரி முழுமையாக எரியாதபோது, நிறமற்ற, மணமற்ற ஆபத்தான கார்பன் மோனாக்சைட் வாயு வெளியாகிறது.
மூடிய அறைக்குள் இந்த வாயு பரவும்போது சுவாசிப்பவர்களுக்குத் தெரியாமலேயே மயக்கம் ஏற்பட்டு மரணம் நேருகிறது எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.