யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் கடந்த இரு மாத காலப்பகுதியில் 13 மோட்டார்சைக்கிள்கள் பட்டப் பகலில் திருடிச் செல்லப்பட்டுள்ளன. இந்தச் சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் பாதுகாப்புத் தொடர்பான நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தியுள்ளன.
நேற்று(செப்ரெம்பர் 6) யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் உள்ள வங்கி ஒன்றின் முன்பாக நிறுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் திருடிச் செல்லப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளை திருடன் உருட்டிச் செல்லும் காட்சிகள் பாதுகாப்புக் கமராக்களில் பதிவாகியுள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பாகத் தற்போது பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பட்டப்பகலில் நகர் பகுதியில் தொடர்ச்சியாக மோட்டார்சைக்கிள் திருடப்படுகின்றமை பொலிஸாரின் செயற்பாடு தொடர்பான கேள்வியை எழுப்புகின்றது என்று பொதுமக்கள் கூறுகின்றனர். இரு மாதங்களுக்குள் 13 மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டிருக்கும் நிலையில், பொலிஸார் தொடர்ந்தும் வேடிக்கை பார்க்கின்றனரா என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
குற்றம் நடந்த பின்னர் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதை விடவும்,, குற்றம் நடப்பதற்கு முன்னர் தடுக்கவேண்டியதே பொலிஸாரின் முதன்மைக் கடமை என்று சுட்டிக்காட்டியுள்ள பொதுமக்கள், யாழ்ப்பாணம் நகரப் பகுதிக்குள் பொலிஸ் ரோந்துகளைகளையோ, போக்குவரத்தைச் சீர்செய்யும் போக்குவரத்துப் பொலிஸாரையோ காண்பது அரிது என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.