ஊர்காவற்துறை பிரதேச சபையால் எழுவைதீவு உப அலுவலகத்திற்கென 20.03.2023 வழங்கப்பட்ட உழவு இயந்திரம் பாவிக்கப்படாத நிலையில் தலைமை அலுவலகத்தால் மீளப்பெறப்படவுள்ளதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
அலுவலகம் மற்றும் மக்கள் பயன்பாட்டுக்காக எழுவைதீவு வட்டார உறுப்பினரும் சமூக சேவகருமாகிய அ.அருள்நாதனின் பெரும் முயற்சியால் கொண்டுவரப்பட்ட உழவு இயந்திரம் திருப்பி அனுப்பப்பட்டால் மீண்டும் எக்காலமும் பெறமுடியாத நிலை ஏற்படும்.
எனவே இவ்வாகனத்தை உள்ளூர் மக்கள் பயன்படுத்தி பயன்பெறவேண்டும் என நலன் விரும்பிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பிட்ட சில உள்ளூர் படகுப் சேவையாளர்கள் தமது படகில் ஏற்றப்படும் மக்கள், பொருட்கள் என்பன தமது வாகனங்களிலேயே ஏற்றவேண்டும் என்ற கண்டிப்பான செயற்பாட்டினால் பிரதேச சபைக்கென கொண்டு வரப்பட்டு 03 மாதங்கள் ஆகின்றபோதும் இதுவரை எவ்வித ஓட்டமும் பதிவு செய்யப்படவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
மீளப்பெறும் நடவடிக்கையை மக்கள் நலன்சார்ந்து பரிசீலனை செய்து பிரதேச சபையினர் முடிவெடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
இதேவேளை எழுவைதீவு பிரதேச சபைக்கு வழங்கப்பட்ட உழவு இயந்திரத்துக்கான சாரதி நிரந்தரமாக நியமிக்கப்படாமையால் தேவைகள் ஏற்படும் போது முன்னரே ஊர்காவற்றுறை பிரதேச சபைக்கு அறிவிக்கின்ற போது தான் அதற்கான சாரதியை எழுவைதீவுக்கு அனுப்பி வைக்கின்ற நிலைமை காணப்படுகின்றது.
திடீரென வாகனத் தேவையை எதிர்பார்த்திருக்கின்ற மக்களுக்கு இத் தேவையை பெறமுடியாதுள்ளது.
எனவே தான் இக் காரணத்தால் பொதுமக்கள் உள்ளூர் மக்களிடம் இருந்து வாகனங்களை பிடிக்கின்ற நிலையும் காணப்படுகின்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே இவ் அலுவலகத்துக்கான உழவு இயந்திரத்துக்கு நிரந்தர சாரதியை நியமிக்குமாறு பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.