மன்னார் மடுமாதா திருத்தலத்தில் கடந்த ஜூன் மாதம் 23 ஆம் திகதி கொடி யேற்றத்தைத் தொடர்ந்து நவநாள் ஆராதனை திருப்பலிகள் இடம் பெற்று கடந்த சனிக்கிழமை (ஜூலை 1) மாலை வேஸ்பர்ஸ் ஆராதனை இடம் பெற்றது.
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 2) காலை 6.15 மணிக்கு திருவிழா திருப்பலி மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில், கொழும்பு உயர் மறை மாவட்டத்தின் துணை ஆயர் அன்ரன் ரஞ்சித் அடிகளார் மற்றும் மடு பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அடிகளார், மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை கிறிஸ்து நாயகம் அடிகளார், நூற்றுக்கணக்கான குருக்கள் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக தமிழ், சிங்கள மொழிகளில் ஒப்புக்கொடுத்தனர்.
திருவிழா திருப்பலியை தொடர்ந்து மடு அன்னையின் திருச்சுரூப ஆசீர் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
திருவிழா திருப்பலியில் அருட்தந்தையர்கள்,அருட் சகோதரர்கள், திணைக்கள தலைவர்கள் உள்ளடங்கலாக சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் 1924 ஆம் ஆண்டு ஆடி 2 ஆம் திகதி மருதமடு திருப்பதியிலே பல ஆயர்கள் சூழ மருதமடு அன்னைக்கு முடிசூட்டு விழா இடம்பெற்றது.
குறித்த முடிசூட்டு விழாவின் நூற்றாண்டு நிறைவு யூபிலி பெருவிழாவாக எதிர்வரும் வருடம்(2024) ஆண்டு ஜூலை மாதம் கொண்டாடப்படவுள்ளது.
அதனை முன்னிட்டு திருவிழாவின் போது மன்னார் மறைமாவட்ட ஆயர் யூபிலி நூற்றாண்டு விழாவினை பிரகடனம் செய்து வைத்தார்.
அதனை வெளிப்படுத்தும் முகமாக வருடம் முழுவதும் பறக்க விடப்படுகின்ற யூபிலி கொடி மருதமடு ஆலய முன் மண்டபத்தில் ஏற்றி வைக்கப்பட்டது. இறுதியில் திருச்செபமாலை வடிவில் பலூன்கள் பறக்கவிடப்பட்டது.