மன்னார், மாந்தை மேற்கிலுள்ள ஆத்திமோட்டைக் கிராமத்தில் சட்டவிரோத மணல் அகழ்வைத் தடுக்க முயன்ற பொதுமக்கள், கிராம அலுவலர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மன்னார் நானாட்டன் பிரதேச சபை உறுப்பினர் ரொஜன் ஸ்ராலினின் மணல் அகழும் வாகனம் ஒன்றைக் கைப்பற்றிய பொதுமக்களும், கிராம அலுவலரும் அதைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கக் காத்திருந்தபோதே இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
நேற்றுமுன்தினம் மணல் அகழ்வு தொடர்பான பொதுமக்களின் முறைப்பாட்டை அடுத்து மாந்தை மேற்குப் பிரதேச செயலர் உள்ளடங்கிய குழு சம்பவ இடத்துக்குச் சென்று ஆராய்ந்தது.
மணல் அகழ்வு தொடர்பாக இலுப்பைக்கடவை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டபோதும், பொலிஸார் அது தெடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
கைப்பற்றப்பட்ட பொருள்களைப் பொலிஸார் பாரமெடுக்காத நிலையில், அவற்றைப் பாதுகாத்த பொதுமக்கள் மற்றும் பிரதேச சபை ஊழியர்கள் மீது பிரதேச சபை உறுப்பினர் ரொஜன் ஸ்ராலினும், குழுவொன்றும் தாக்குதல் நடத்தியது என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்தத் தாக்குதலில் பெண் கிராம அலுவலர் உட்படப் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும், அமைச்சருமான காதர் மஸ்தானுக்கு தெரியப்படுத்தப்பட்டதை அடுத்து அவர் சம்பவ இடத்துக்குச் சென்று மக்களுடன் கலந்துரையாடினார். இந்தச் சம்பவம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உறுதியளித்தார்.