ஆங்கில சிறுவர் கதைப் புத்தகங்களின் அட்டைக்குள் மிகவும் சூட்சகமான முறையில் கொக்கெய்ன் போதைப்பொருளை இலங்கைக்கு கடத்திவந்த வெளிநாட்டு பெண்ணொருவர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தோனேஷியாவைச் சேர்ந்த 42 வயதான பெண் ஒருவரே இவ்வாறு போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட வெளிநாட்டு பெண் பிரஜையிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள் இலங்கையின் பெறுமதி சுமார் இருபத்து மூன்று கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடையது எனத் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரான இந்தோனேஷியாவைச் சேர்ந்த குறித்த பெண், இலங்கைக்கு முதற் தடவையாக இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார் எனவும், அவர் அந்த நாட்டில் புடவை வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட குறித்த பெண், போதைப் பொருளுடன் முதலில் எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபாவிலிருந்து தனது பயணத்தைத் ஆரம்பித்து, கத்தாரின் தோஹா ஊடாக நேற்று (22) மதியம் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
கைது செய்யப்பட்ட வெளிநாட்டு பெண் பிரஜையினமிருந்து, மிகவும் மதிநுட்பமான முறையில் 8 ஆங்கில சிறுவர் கதை புத்தக அட்டைக்குள் மறைத்து வைத்திருந்த 04 கிலோ கொக்கெய்ன் மற்றும் 598 கிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
குழந்தைகளுக்கான ஆங்கில கதைப் புத்தகங்களின் அட்டைகளை வெட்டி அதனை அடுக்கி, அதற்குள் போதைப்பொருளை அடைத்து, பயணப் பொதிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.