வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட புங்குடுதீவு பிரதேசத்தில் ஏற்பட்டிருந்த கொரோனா அச்சுறுத்தல் நிலைமையை தடுப்பதற்கு ஏதுவான சகல சுகாதார வழிமுறைகளையும் முன்னெடுப்பதில் அயராது பாடுபட்ட எமது பிரதேசத்தின் சுகாதார தரப்பினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் எமது நன்றிகளை தெரிவிப்பதுடன் அவர்களது பணியை தொடர்ந்தும் எமது பகுதியில் முன்னெடுப்பதற்கு முழுமையான ஒத்துழைப்பையும் வழங்க தாயாராக இருப்பதாக வேலணை பிரதேச சபையின் தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் –
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மினுவாங்கொடவில் உள்ள பிராண்டிக்ஸ் கார்மென்ட் நிறுவனத்தின் ஊழியர்களூடாக யாழ்ப்பாணத்தின் வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட புங்குடுதீவு பகுதியில் யுவதி ஒருவர் தொற்றுறுதியுடன் அடையாளரம் காணப்பட்டிருந்தார்
இதன்காரணமாக புங்குடுதீவில் 1212 குடும்பங்களை சேர்ந்த 3915 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் வேலணை பிரதேசத்திலும் சுகாதர தரப்பினரால் 57 பேர் தனிமைப் படுத்தப்பட வேண்டிய நிலை உருவானது.
இந்நிலையில் குறித்த தாக்கம் மேலும் அதிகரித்து செல்லாத வகையில் எமது பிரதேசத்தின் பொது சுகாதார தரப்பினர் துரிதகதியில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர். இதன்காரணமாக முடக்கப்பட்டிருந்த குறித்த பகுதி கொரோனா அச்சம் இன்றிய பகுதியாக விடுவிக்கப்பட்டது.
இக்காலப்பகுதியில் முடக்கப்பட்டிருந்த புங்குடுதீவு மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்துகொடுப்பதற்காக பலவழிகளிலும் நடவடிக்கைகளை மேற்கொண்ட வேலணை பிரதேச செயலர் தலைமையிலான செயலகத்தின் உத்தியோகத்தர்கள், வேலணை பிரதேச சபையின் செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள், புங்குடுதீவு பொது அமைப்புகள், நயினாதீவு நாகபூசணி பரிபாலன சபையினர் உள்ளிட்ட இன்னும் பலதரப்பினர் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.
இவர்களது இந்த அச்சுறுத்தல்கால பொறுப்பு மிக்க பணிக்காக எமது பிரதேச சபையின் சார்பில் நன்றிகளை தெரிவித்து கொள்வதுடன் எமது பிரதேசத்தில் அவர்களது சேவையை தொடர்ந்தும் முன்னெடுக்க நாம் தொடர்ந்தும் அவர்களுக்கு பக்கபலமாக இருந்து செயற்படுவோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தற்போது எமது பிரதேசத்தில் கொரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டாலும் தொடர்ந்தும் நாட்டில் காணப்படும் கொரோனா பரவலின் வேகத்தை கருத்தில் கொண்டு நாம் அனைவரும் எமது தனிப்பட்ட பாதுகாப்பையும் பிரதேசத்தின் பாதுகாப்பையும் உறுதிசெய்துகொள்ள அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்படும் சுகாதார நடைமுறைகளையும் பேணி சுகாதார தரப்பினருக்கு முழுமையான ஒத்துழைப்பை தொடர்ந்தும் வழங்கி எமது பகுதியை கொரோன தொற்றிலிருந்து பூரணமாக பாதுக்காக ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.