இணையவழி நிதி மோசடிகள் மற்றும் சட்டவிரோத டிஜிட்டல் வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாக சந்தேகிக்கப்படும் 32 சீன நாட்டவர்கள் தங்கியிருந்த விடுதி ஒன்றை, பாணந்துறை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அதிரடியாகச் சோதனையிட்டுள்ளனர்.
நல்லோர்வ பகுதியில் அமைந்துள்ள பிரபல தங்கும் விடுதியொன்றில் நவம்பர் 6 மற்றும் 7 ஆகிய திகதிகளில் இந்த அதிரடி வேட்டை நடத்தப்பட்டுள்ளது.
பாணந்துறை பிரதேச பொறுப்பு சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளருக்குக் கிடைத்த இரகசியத் தகவலைத் தொடர்ந்து, பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தின் முன்அனுமதியுடன் இந்த நடவடிக்கை பாய்ந்தது.
இந்த பிரம்மாண்ட கூட்டுச் சோதனையில் குற்றப் புலனாய்வுத் துறை , பொலிஸ் சிறப்பு அதிரடிப் படை
குற்றப் பதிவேடுகள் பிரிவு
பொலிஸ் நாய்கள் பிரிவு
உத்தியோக மொழிகள் திணைக்களம்
ஆகிய பல முக்கியப் படைகள் இணைந்து களமிறங்கின.
விடுதியிலிருந்த 32 சீன நாட்டவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டதுடன், அவர்கள் பயன்படுத்திய 23 மடிக்கணினிகள் மற்றும் டிஜிட்டல் சாதனங்கள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பறிமுதல் செய்யப்பட்ட கணினிகள் மற்றும் உபகரணங்கள் மேலதிக ஆய்வுக்காக பாணந்துறை தெற்கு பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. இதில் இடம்பெற்றுள்ள மிகப்பெரிய சர்வதேச நெட்வொர்க் குறித்தும், நிதி மோசடிகளுக்கான ஆதாரங்கள் குறித்தும் குற்றப் புலனாய்வுத் துறை தீவிர விசாரணைகளை முடுக்கவிட்டுள்ளது.
அண்மைக்காலமாக இலங்கையில் உள்ள சொகுசு ஹோட்டல்கள், விருந்தினர் இல்லங்கள் மற்றும் ரிசார்ட்டுகளை வாடகைக்கு எடுத்து, வெளிநாட்டுக் குழுக்கள் இதுபோன்ற இணையவழி நிதி மோசடிகளில் ஈடுபடுவது அதிகரித்துள்ளதாக பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
தங்குமிட உரிமையாளர்கள் சந்தேகத்திற்கிடமான வெளிநாட்டினரின் நடமாட்டம் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும்.
ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக 118 அல்லது 119 என்ற அவசர இலக்கங்கள் மூலமாகவோ அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ தகவல் தெரிவிக்க வேண்டும்.