நெடுந்தீவை பார்வையிட வந்த வெளிநாட்டு சுற்றுலாத் தம்பதியரை ஏற்றிச் சென்ற நயினாதீவு படகு, கடந்த ஞாயிற்றுக்கிழமை (பெப் 09) மாலை, நெடுந்தீவில் இருந்து குறிகட்டுவான் துறைமுகத்துக்கு செல்லும் வழியில், எரிபொருள் பற்றாக்குறையால் கடலில் செயலிழந்தது.
இந்த நிலையைக் கவனித்த நெடுந்தீவில் அமைந்துள்ள இலங்கை கடற்படையின் வசப நிறுவனம், உடனடியாக நடவடிக்கை எடுத்தது. வசப நிறுவனத்திற்குச் சொந்தமான P239 கரையோர ரோந்து கப்பல் மூலம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக பரிசோதனையில், படகு எரிபொருள் தட்டுப்பாட்டால் செயலிழந்து மிதந்து கொண்டிருந்தது உறுதிப்படுத்தப்பட்டது.
அதன் பின்னர், கடற்படையினர் படகுக்கு தேவையான உதவிகளை வழங்கியதுடன், சுற்றுலாத் தம்பதிகளுடன் படகை பாதுகாப்பாக குறிகட்டுவான் துறைமுகத்துக்கு அழைத்து சென்றனர்.