நாகபட்டினம்-காங்கேசன்துறை பயணிகள் கப்பல் சேவை இந்த வார இறுதியில் (சனி அல்லது ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பிக்கப்படும் என்று ஆஷா ஷிப்பிங் ஏஜென்சிஸ் நிறுவனப் பிரதி முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இந்த வார இறுதியில் பரீட்சார்த்தமாக ஆரம்பிக்கப்படவுள்ள நாகபட்டினம்-காங்கேசன்துறை கப்பல்சேவை மாரி காலம் ஆரம்பிக்கவுள்ளதால் எதிர்வரும் பதினைந்தாம் திகதியுடன் நிறுத்தப்பட்டுப் பின்னர், எதிர்வரும் ஜனவரி 15ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்த படகில் 150 பயணிகள் மட்டுமே பயணம் செய்ய முடியும் என்றும் பயண நேரம் மூன்று மணித்தியாலங்களாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது . இந்தக் கப்பல்சேவைக்கு ஒரு வழி பயணக்கட்டணமாக 25 ஆயிரத்து 500 இலங்கை ரூபா அல்லது 6 ஆயிரத்து 500 இந்திய ரூபா என அறவிடப்படும்.
பயணிகள் 50 கிலோ எடையுள்ள பொதிகளை இலவசமாக எடுத்துச்செல்ல முடியும். மேலதிக எடைக்கு மேலதிக கட்டணம் அறவிடப்படும். பயணச்சீட்டுகளை நாகபட்டினத்திலும் இலங்கையிலுள்ள ஆஷா ஷிப்பிங் ஏஜென்சிஸ் நிறுவன அலுவலகங்களிலும் பெற்றுக்கொள்ள முடியும்.
கொழும்பு,திருகோணமலை,அம்பாந்தோட்டை, யாழ்ப்பாணத்தில் விரைவில் இந்த நிறுவனத்துக்கான அலுவலகங்கள் திறக்கப்படவுள்ளன.
இந்திய கப்பல் கூட்டுத்தாபனத்தால் நடத்தப்படவுள்ள நாகபட்டினம்-காங்கேசன்துறை படகுச்சேவையின் உள்ளூர் முகவர்களாக ஆஷா ஷிப்பிங் ஏஜென்சிஸ் நிறுவனம் நியமிக்கப்பட்டுள்ளது.
தற்போது யாழ்ப்பாணத்தில் தங்கியுள்ள ஆஷா ஷிப்பிங் ஏஜென்சிஸ் நிறுவனத்தினர் சுங்க அதிகாரிகளுடனும் துறைமுக அதிகாரிகளுடனும் பேச்சு நடத்தி வருகின்றனர். காங்கேசன்துறை துறைமுகத்தில் குடிவரவு குடியகல்வு அதிகாரி ஒருவரும் நியமிக்கப்படவுள்ளார்.
பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் ஜனவரி முதல் அதிகளவு பயணிகளை ஏற்றிச்செல்லக்கூடிய கப்பல் ஒன்றை சேவையில் ஈடுபடுத்துவதற்கு தாம் திட்டமிட்டுள்ளோம் என்றும் ஆஷா ஷிப்பிங் ஏஜென்சிஸ்அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தப் பயணிகள் கப்பலுக்கு ’செரிபாணி’ என பெயரிடப்பட்டுள்ளது.