செம்மணி விவகாரத்தில், நீதிமன்றம் ஊடாகவே தீர்வு காண நாங்கள் முயற்சிக்கிறோம்.எமது கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார். இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கையில் செம்மணி மனித புதைக்குழி தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த அரசாங்கத்திலும் மனித உரிமைகள் மீறல் செயற்பாடுகள் தீவிரமடைந்துள்ளமை கவலைக்குரியது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஆணைக்குழுக்கள் செலவின தலைப்பு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
தேர்தல்கள் ஆணைக்குழு இறுதியாக உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நடத்தியது.மாகாணசபைத் தேர்தல்கள் பல ஆண்டுகாலமாக பிற்போடப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியை கொண்டு மாகாணசபைத் தேர்தலை அடுத்த ஆண்டாவது மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.மாகாணசபைத் தேர்தல் தொடர்ச்சியாக பிற்போடப்பட்டுள்ளதால் எமது மக்களின் அடிப்படை உரிமைகள் புறக்கணிக்கப்படுகிறது. பல பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியாத நெருக்கடி தோற்றம் பெற்றுள்ளது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துக் கொள்கிறேன். இலங்கை விவகாரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் கூட்டத்தொடர் இடம்பெறும் போது உள்ளக பொறிமுறை ஊடாகவே தீர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக குறிப்பிடப்படுகிறது. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களை தடுத்தல் சட்டமூலம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சருக்கு விசேட கடிதம் ஒன்றை கடந்த மாதம் அனுப்பி வைத்துள்ளது.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் உள்ளடக்கங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களைத் தடுத்தல் தடுத்தல் சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும், அடிப்படை உரிமைகளை அச்சுறுத்தும் ஏற்பாடுகளும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் மனித உரிமைகள் ஆணைக்குழு நீதியமைச்சருக்கு அறிவித்து, சட்டமூலத்தை வாபஸ் பெறுமாறும் குறிப்பிட்டுள்ளது. அதேபோல் பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் குறித்தும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கடந்த மாதம் நீதியமைச்சருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.
அரசை பாதுகாப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரத்தை பாதிக்கும் வகையிலான ஏற்பாடுகள் சட்டமூலத்தில் உள்வாங்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு நீதியமைச்சுக்கு அறிவித்துள்ளது. இவற்றை திருத்தம் செய்யாமல் எவ்வாறு சட்டமூலத்தை நிறைவேற்றுவதுஇ .இது பாரியதொரு பிரச்சினையாகும்.பொறுப்புக்கூறல் விவகாரத்தில் இலங்கை அரசாங்கம் எவ்வாறான நிலைப்பாட்டை கொண்டுள்ளது என்பது சந்தேகத்துக்குரியதாக உள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தல்களையும் அரசாங்கம் கவனத்திற் கொள்ளவில்லை.இது முறையற்றதாகும்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவிய மனித உரிமை மீறல் சார்ந்த பிரச்சினைகளுக்கு இதுவரையில் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படவில்லை. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவிய மனித உரிமை மீறல்கள், சுதந்திரம் மறுக்கப்பட்டமை தொடர்பில் ஆராய வேண்டும். காணி விடுவிப்பு தொடர்ந்து இழுத்தடிக்கப்பட்டுள்ளதால் மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டு வருகிறது.
செம்மணி மனித புதைக்குழி தொடர்பில் நீதியமைச்சர் இன்று சபையில் உரையாற்றியிருந்தார்.தொல்லியல் நிபுணர் சோமதேவ சமர்ப்பித்த அறிக்கை மாத்திரமே என்று குறிப்பிட்டுள்ளார். நீதிமன்றமும் அவ்வாறே குறிப்பிட்டுள்ளது.ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் டி.என்.ஏ. பரிசோதனைக்கு தயாராகவுள்ளவர்கள் தொடர்பில் சத்தியகடதாசிகளை வழங்கி அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.
செம்மணி விவகாரத்தில், நீதிமன்றம் ஊடாகவே தீர்வு காண நாங்கள் முயற்சிக்கிறோம்.எமது கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார். இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கையில் செம்மணி மனித புதைக்குழி தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த அரசாங்கத்திலும் மனித உரிமைகள் மீறல் செயற்பாடுகள் தீவிரமடைந்துள்ளமை கவலைக்குரியது என்றார்.