மஞ்சள் நிறத்திலான வெற்று எரிவாயு சிலிண்டர்களுக்கு நீல நிறம் பூசி, அவற்றை லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களாகக் காண்பித்து மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் தந்தை, மகன் உள்ளிட்ட மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரையும் எதிர்வரும் டிசம்பர் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொட்டதெனியாவ பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வெற்று மஞ்சள் நிற எரிவாயு சிலிண்டர்களுக்கு நீல நிறம் பூசி, அவற்றை லிட்ரோ நிறுவனத்தின் எரிவாயு சிலிண்டர்களைப் போன்று மாற்றி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், புதிதாக வர்ணம் பூசப்பட்ட சிலிண்டர்கள் பழையவை மற்றும் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டவை போன்று தோற்றமளிக்கச் செய்வதற்காக விசேட தந்திரம் ஒன்றையும் சந்தேகநபர்கள் கையாண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதற்காக, சிலிண்டர்களின் மீது உணவுக் கழிவுகள், அப்ப மாவின் எச்சங்கள் மற்றும் மிளகாய்க் குழம்பு உள்ளிட்ட உணவுப் பொருட்களைப் பூசி, அவை சமையலுக்குப் பயன்படுத்தப்பட்டவை போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொட்டதெனியாவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.