உரல், உலக்கை போன்றவற்றுக்குத் தங்க முலாம் பூசி பழம்பெரும் பொருள்கள் என்று ஏமாற்றி விற்க முயன்ற குற்றச்சாட்டில் இருவர் முல்லைத்தீவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்று நடந்துள்ளது. நுவரெலியாவிலிருந்து வந்த இருவரே இந்த நூதன மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டுச் சிக்கியுள்ளனர்.
நுவரெலியாவில் இருந்து வந்த இருவரும், முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமாரபுரத்தில் வியாபார பேரம் பேசல்களை நடத்தியுள்ளனர்.
சீனச்சட்டியிலான சிறிய உரல், உலக்கை, சில ஆபணரங்களுக்கு தங்க முலாம் பூசி அவை பண்டைய காலப் பொருள்கள் என்று கூறியுள்ளனர். ஆபரணங்கள் மன்னர் காலத்துக்குரியவை என்றும் கதை விட்டுள்ளனர்.
இவர்களின் இந்த மோசடி வியாபாரம் தொடர்பாக தகவல் அறிந்த சிறப்பு அதிரடிப் படையினர் சம்பவ இடத்துக்குச் சென்று சந்தேகநபர்களைக் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து பொருள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட இருவரும் 22 மற்றும் 37 வயதுடையவர்கள் .அவர்கள் தற்போது முள்ளியவளைப் பொலிஸாரிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.