வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையுடன் நெடுந்தீவு பிரதேச செயலகமும் கலாச்சார பேரவையும் இணைந்து நடாத்திய பண்பாட்டு விழா – 2024 இன்றையதினம் (ஜூலை26) காலை நெடுந்தீவு தேவா கலாச்சார மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
நெடுந்தீவு பிரதேச செயலர் திருமதி நிவேதிகா கேதீசன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ம. பிரதீபன் அவர்களும் சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் பிரதிப் பணிப்பாளர் லாகினி நிருபராஜ் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
நெடுங்கீற்று VI மலரினை நிகழ்வின் பிரதம விருந்தினரும் யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபருமான ம. பிரதீபன் அவர்கள் வெளியிட்டு வைக்க அதன் முதற் பிரதியினை நெடுந்தீவு பிரதேச செயலக கணக்காளர் வ. சுபாசன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
நூலிற்கான வெளியீட்டுரையினை நெடுந்தீவு கலாச்சார பேரவை உப தலைவர் செ. மகேசு அவர்களும் நூல் ஆய்வுரையினை இந்து கற்கைகள் பீட முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி தி.செல்வமனேகரன் அவர்களும் ஏற்புரையினை நெடுந்தீவு பிரதேச கலாச்சார உத்தியோகத்தர் அ.சிவஞானசீலன் அவர்களும் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வின் போது பாடசாலை மாணவர்கள் மற்றும் கலாச்சார பேரவையினரின் கலைநிகழ்வுகள், சான்றிதழ் வழங்கல் , கலைஞர் கௌரவிப்பு என்பன சிறப்பாக இடம்பெற்றது.