நெடுந்தீவு கிழக்கு சனசமூக நிலையத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் வாழ்விற்கான பேரொளி “வாசிப்பு” எனும் தொனிப்பொருளிலான அமர்வு – 7 நிகழ்வு இன்றையதினம் ( ஜூலை 04 ) வியாழக்கிழமை மாலை 3.00 மணிக்கு நெடுந்தீவு மாவிலித்துறைறோ. க. த. க. வித்தியாலய மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
மகாவித்தியாலய மாணவிகளின் தமிழ்த் தாய் வாழ்த்துடன் ஆரம்பமாகிய நிகழ்வின் தொடக்கவுரையினை நெடுந்தீவு கிழக்கு சனசமூக நிலையத்தின் தலைவர் தி. கிரிதரன் வழங்கியிருந்தார்.
தொடர்ந்து வாழ்விற்கான பேரொளி “வாசிப்பு” எனும் தொனிப்பொருளிலான அமர்வு – 7 நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது எமது வளவாளர்களான ஓய்வுநிலை மாகாண கல்விப் பணிப்பாளர் செ. மகேசு, ஓய்வுநிலை ஆசிரியை ப.செந்தில்நாயகி ஆகியோரின் சிறுவர் வழிகாட்டல் கருத்துரைகளும், சிறார்களின் நிகழ்வுகளும் சிறப்பாக இடம்பெற்றது.
சமூக செயற்பாட்டாளரும், எழுத்தாளருமான பி. இராயகரன் அவர்கள் வாசிப்பின் முக்கியத்துவம் தொடர்பான சிறப்புரையினை வழங்கியிருந்தார்.
நிகழ்வின் அனுசரணையாளரான வள்ளித்தமிழ் அமுதம் செயற்பாட்டுகுழுவினரால் நெடுந்தீவு மண்ணின் இளம் படைப்பாளர்களை ஊக்குவிக்கவும், வெளிக்கொணரவும் நெடுந்தீவு பாடசாலைகளில் இருந்து இளம்கவிஞர்களின் ஆக்கங்களை பெற்று ஆக்கப்பட்ட “பேரொளி” எனும் கவிதைத்தொகுப்பு வெளியீடு இடம்பெற்றது.
கவிதைத் தொகுப்பினை வள்ளித்தமிழ் அமுதம் செயற்பாட்டு குழுவின் ஸ்தாபகர் தி. கங்காதரன் அவர்கள் வெளியிட்டு வைக்க முதற் பிரதியினை ஓய்வு நிலை மாகாண உதவிக் கல்விப்பணிப்பாளர் செ.மகேசு அவர்கள் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து கவிதை தொகுப்பிற்கான ஆக்கங்களை வழங்கிய இளம் கவிஞர்களுக்கான விருது மற்றும் அவர்களது கவிதைகளைத் தாங்கிய கவிதைத் தொகுப்பு என்பன நிகழ்வினை அலங்கரித்த பெருந்தகைகளால் வழங்கிவைக்கப்பட்டதுடன் நெடுந்தீவு கிழக்கு சனசமூக நிலையத்தின் நூல் இரவல் வழங்கும் பிரிவான இரகுபதி நினைவு நூலகத்தினை தொடர்ந்துபயன்படுத்தும் சிறந்த வாசகர்கள் நால்வருக்கான விருது வழங்கலும் இடம்பெற்றது.
தொடர்ந்து வள்ளித்தமிழ் அமுதம் செயற்பாட்டு குழுவின் ஸ்தாபகர் தி. கங்காதரன் அவர்களினால் குழுவின் செயற்பாடுகள் தொடர்பிலான விளக்கவுரையும் வழங்கப்பட்டது.
நெடுந்தீவு கிழக்கு சனசமூக நிலையத்தின் செயலாளர் கு.ஜனேந்திரன் அவர்களின் நன்றியரையுடன் நிகழ்வுகள் இனிதே நிறைவுபெற்றது.
இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்கள் , அதிபர், ஆசிரியர்கள், சிறுவர் செயற்பாட்டு பயிற்றுவிப்பாளர்கள் அ.மரியசுஜீனா , ம. மரியமெர்சிகா மற்றும் நூலக வாசகர்கள் என பலர் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.