கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு வைத்தியர்கள் இன்று (ஜூலை 19) காலை 8.00 மணி முதல் 24 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.
அந்த வைத்தியசாலையில் பெண் விசேட வைத்தியர் ஒருவரின் தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு எதிராகவே தாம் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்ததாக தெரிவித்த வைத்தியர் சம்மில் விஜேசிங்க, பெண் விசேட வைத்தியர் ஒருவரின் பொருத்தமற்ற மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தையினால் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அந்த மருத்துவமனையின் பணிப்பாளர் பிரச்சினைக்கு தீர்வுகாண தவறியதால், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் முறையிட்டு ஒரு வாரத்திற்குள் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என தெரிவித்த அவர், இதுவரை மூன்று வாரங்கள் கடந்துள்ள நிலையில், தீர்வு காணப்படவில்லையென தெரிவித்துள்ளார்.