ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் 8 பேருக்கு மரண தண்டனை!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த ஒருவரை கடத்திக் கொலை செய்த சம்பவம் தொடர்பான வழக்கில், 8 பேருக்கு மரண தண்டனை விதித்த மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் , 9ஆவது பிரதிவாதியை வழக்கில் இருந்து விடுதலை செய்துள்ளது.

மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் இன்று (19/11) வியாழக்கிழமை இந்தத் தீர்ப்பை வழங்கினார்.

கடந்த 2008ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19ஆம் திகதி, ஏறாவூர் பகுதியைச் சேர்ந்த தேவதாஸ் சுரேஷ்குமார் என்பவரை அப்போதைய செங்கலடி முகாமில் இருந்த ஈழ மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்கள் வானில் கடத்திச் சென்று கொலை செய்து புதைத்து, அதன் மீது வாழைமரத்தை நட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் 9 பேரைக் கைது செய்து, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தனர். நீதவான் நீதிமன்ற விசாரணையின் பின்னர், இந்த வழக்கு 2016ஆம் ஆண்டு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வேன் மீட்கப்பட்ட நிலையில், வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது.

தீர்ப்பு வழங்கப்பட்டபோது, வழக்குத் தொடுநர் சார்பில் அரச சட்டவாதிகளான தர்சிகா திருக்குமரநாதன், சதீஸ்காந் மோகன் ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.

இதன்படி, முதலாவது குற்றச்சாட்டான மரணத்தை விளைவிக்கும் பொது நோக்கத்துடன் கூடிய சட்டவிரோதக் கூட்டத்தில் உறுப்பினராக இருந்தமைக்காக தண்டனைச் சட்டக்கோவை பிரிவு 140இன் கீழ் 6 மாத சாதாரண சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது குற்றச்சாட்டான பொது நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் சட்டவிரோதக் கூட்டத்தில் உறுப்பினராக இருந்து ஆட்கொலை செய்தமைக்காக தண்டனைச் சட்டக்கோவை பிரிவு 296-இன் கீழ் மரண தண்டனையும், மூன்றாவது குற்றச்சாட்டான தேவதாஸ் சுரேஷ்குமாரின் மரணத்தை விளைவித்து ஆட்கொலை செய்தமைக்காகவும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

9ஆவது பிரதிவாதியை வழக்கில் இருந்து விடுவித்து நீதிபதி தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 பேரும் உடனடியாக நீதிமன்றத்திலிருந்து மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

Share this Article
Leave a comment