ரியாத் விமான நிலையம் மற்றும் நிதி மையம் மீது தாக்குதல்

SUB EDITOR
SUB EDITOR
2 Min Read

சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள விமான நிலையம் மற்றும் நிதி மையம் மீது பாரியளவிலான குரூஸ் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளதாக யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 இதேவேளை, மத்திய யேமனில் சவூதி அரேபியா நடத்திய வான்வழித் தாக்குதல்களில் ஒரு குழந்தை உட்பட குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக அக்குழு அறிவித்துள்ளது.

 சமூக வலைத்தளமான ‘எக்ஸ்’ (X) தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரியாத்தில் உள்ள மன்னர் காலித் சர்வதேச விமான நிலையம் மற்றும் நிதி மையம் ஆகியவற்றை இலக்கு வைத்து “பெருமளவிலான குரூஸ் ஏவுகணைகளை” ஏவியுள்ளதாக ஹூதி இராணுவப் பேச்சாளர் யஹ்யா சாரியா தெரிவித்துள்ளார்.

 யேமனில் உள்ள பொதுமக்கள் வசதிகள் மீது சவூதி நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 முன்னதாக வெளியிட்டிருந்த மற்றுமொரு அறிக்கையில், கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் தலைநகர் சனா மற்றும் எட்டு மாகாணங்களில் உள்ள பொதுமக்கள் வசதிகளை இலக்கு வைத்து சவூதி விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் யேமனின் பல பகுதிகளில் 87 தாக்குதல்களை நடத்தியுள்ளதாகக் கூறியிருந்தார்.

 நேற்று மத்திய யேமனின் இப் (Ibb) மாகாணத்தில் சவூதி நடத்திய வான்வழித் தாக்குதல்களில் ஒரு குழந்தை உட்பட குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஐவர் காயமடைந்துள்ளதாக ஹூதிகளினால் நிர்வகிக்கப்படும் அல்-மசிரா தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

 இதேவேளை, ரியாத் மற்றும் சவூதி அரேபியாவின் தெற்குப் பகுதிகளை நோக்கி ஹூதிகளினால் ஏவப்பட்ட இரண்டு ஆளில்லா விமானங்களை (ட்ரோன்கள்) இடைமறித்து அழித்துள்ளதாக யேமனில் உள்ள சவூதி தலைமையிலான கூட்டணி தெரிவித்துள்ளது.

 உயிரிழப்புகள் அல்லது சேதங்கள் குறித்த மேலதிக விபரங்கள் எதனையும் வழங்காமல், கூட்டணியின் பேச்சாளரினால் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 ஹூதிகளுக்கும், சவூதி தலைமையிலான கூட்டணியின் ஆதரவு பெற்ற யேமன் அரச படைகளுக்கும் இடையில் மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் இந்தத் தாக்குதல்கள் பதிவாகியுள்ளன.

 சவூதியின் எண்ணெய் உட்கட்டமைப்புகள் மற்றும் இராணுவ நிலைகள் மீது தொடர்ச்சியான ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தியதாகவும் ஹூதிகள் உரிமை கோரியுள்ளனர்.

 2014 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஹூதிகள் சனா மற்றும் நாட்டின் வடக்கின் பெரும்பகுதியைக் கைப்பற்றியதிலிருந்து யேமன் மோதல்களில் சிக்கியுள்ளதுடன், சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கத்திற்கு ஆதரவாக 2015 இல் சவூதி தலைமையிலான கூட்டணி இவ்விடயத்தில் தலையிட்டமை குறிப்பிடத்தக்கது.

 

Share this Article
Leave a comment