இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய கடற்தொழிலாளர்களைத் தடுத்து நிறுத்துவதற்கு ஐ.நாவின் தலையீட்டை இலங்கை அரசு கோரியுள்ளது.
இலங்கைக்கான ஐ.நாவின் வதிவிடப் பிரதிநிதியான மார்க் என்ட்ரோ பிரெஞ்சிடம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்தக் கோரிக் கையை முன்வைத்துள்ளதாக கடற்றொழில் அமைச்சால் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்மையில் மன்னார், நெடுந்தீவு மற்றும் கச்சத்தீவுக்கு அருகாமையில் என மூன்று வெவ்வேறு இடங்களில் 5 இழுவைப் படகுகளுடன் 27 இந்திய கடற்தொழிலாளர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்தனர்.
குறித்த கைது நிகழ்ந்த 48 மணி நேரத்துக்குள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இது தொடர்பில் ஐ.நா. தரப்பின் கவனத்திற்கு கொண்டு சென் றுள்ளார்.
இலங்கைக் கடற்பரப்புக்குள் இந்திய கடற்தொழிலாளர்கள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவது ஒரு பாரிய பிரச்சினையாக இருக்கிறது.
எல்லை தாண்டி அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய கடற்தொழிலாளர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்தும் வருகின்றனர்.
இவ்வாறான நிலை தொடர்வது இலங்கையின் வடக்கு கடற்பரப்பில் பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய கடற்தொழிலாளர்களின் இந்த அத்துமீறல் குறித்து புதுடில்லியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என இலங்கைக்கான ஐ. நா. வதிவிடப் பிரதிநிதி மார்க் என்ட்ரோ பிரெஞ் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு உறுதியளித்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.