இந்தியாவுக்குக் கடத்த முயன்ற தங்கம் – நடுக்கடலில் மடக்கிப் பிடித்த இலங்கை கடற்படை!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

கடல் மார்க்கமாகத் தென்னிந்தியாவுக்குக் கடத்தப்படவிருந்த சுமார் 4.435 கிலோகிராம் தங்கத்தை இலங்கை கடற்படையினர் அதிரடியாகக் கைப்பற்றியுள்ளனர்.

மன்னார் மற்றும் புத்தளம் கடற்பரப்புகளில் முன்னெடுக்கப்பட்ட இருவேறு ரோந்து நடவடிக்கைகளின் போது, இந்தக் கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டதுடன் நான்கு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றையதினம் (17/11) தலைமன்னார் – பேசாலை மற்றும் புத்தளம் – உச்சமுனை ஆகிய கடற்பரப்புகளில் இந்தச் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டன.

முதலாவதாக, வடமத்திய கடற்படைக் கட்டளைக்கு உட்பட்ட கடற்படையினர் தலைமன்னார் – பேசாலை கடற்பரப்பில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த டிங்கி படகு ஒன்றை இடைமறித்துச் சோதனையிட்டனர். படகில் இருந்த மணல் நிரப்பப்பட்ட சாக்குப்பை ஒன்றைச் சோதனையிட்ட போது, கடற்படையினருக்கே அதிர்ச்சியளிக்கும் வகையில் அதற்குள் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 1.410 கிலோகிராம் தங்கம் மீட்கப்பட்டது.

​இச்சம்பவம் தொடர்பில் பேசாலையைச் சேர்ந்த 25 மற்றும் 28 வயதுடைய இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக காங்கேசன்துறை சுங்க அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, செவ்வாய்க்கிழமை இரவு புத்தளம் – உச்சமுனை கடற்பரப்பில் வடமேற்கு கடற்படைக் கட்டளையினர் மற்றுமொரு அதிரடி நடவடிக்கையை முன்னெடுத்தனர். அங்கு இடைமறிக்கப்பட்ட மற்றுமொரு டிங்கி படகில் இருந்த எரிபொருள் கொள்கலன் ஒன்றினுள் மிக நேர்த்தியாக மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 3.25 கிலோகிராம் தங்கம் கைப்பற்றப்பட்டது.

​இது தொடர்பில் கல்பிட்டியைச் சேர்ந்த 40 மற்றும் 50 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காகக் கட்டுநாயக்க சுங்கத் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Share this Article
Leave a comment