அரச அதிகாரிகள் சிலருக்கு சென்ற கடிதம் – அரசாங்கத்திற்கு தொடர்பில்லை!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

வரவு செலவுத் திட்ட உரையை மீண்டும் பார்வையிட்டு அதனை புகைப்படம் எடுத்து சமர்ப்பிக்குமாறு அரச அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டமையானது, அரசாங்கத்தின் தீர்மானம் அல்ல என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

கடந்த 12 ஆம் திகதி இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட உரையை, நிறைவேற்று அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்துப் பதவிநிலை உத்தியோகத்தர்களும் நேரலையில் பார்ப்பதற்குரிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறும், அதனைப் புகைப்படம் எடுத்து சமர்ப்பிக்குமாறும் கமத்தொழில் அமைச்சு தனது நிறுவனத் தலைவர்களுக்கு அறிவித்திருந்தது.

இது குறித்து கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் மேலதிக செயலாளர் சுஜீவ எஸ். குருவின் கையொப்பத்துடன் அமைச்சின் நிறுவனத் தலைவர்களுக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. 

குறித்த அமைச்சின் கையொப்பத்துடன், கடந்த 11 ஆம் திகதி அமைச்சின் கீழுள்ள 11 நிறுவனங்களின் தலைவர்களுக்கு இந்தக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது

இந்நிலையில், அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், இவ்விடயம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் அமைச்சரிடம் எழுப்பினர். 

இதற்கு பதிலளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, “இது அரசாங்கத்தின் தீர்மானம் அல்ல. உண்மையில் எனக்கு அதுபற்றித் தெரியாது. இப்போதுதான் இதனை அறிகிறேன். எனது கீழும் பல நிறுவனங்கள் உள்ளன.

அந்த எந்தவொரு நிறுவனத்திலும் இவ்வாறானதொரு விடயம் முன்னெடுக்கப்படவில்லை. இது தொடர்பில் என்ன நடந்துள்ளது என்பதை நான் கண்டறிவேன். வேறு எந்தவொரு அமைச்சிலிருந்தும் இது தொடர்பில் எனக்கு முறைப்பாடுகள் கிடைக்கவில்லை.

நீங்கள் ஆதாரங்களுடன் கூறுவதை நான் நம்புகிறேன். எனக்கோ அல்லது அரசாங்கத் தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகத்திற்கோ இதுவரை இது குறித்துத் தெரிந்திருக்கவில்லை.

வரவு செலவுத் திட்ட உரை அனைத்து அரச மற்றும் தனியார் தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. அதனை எவரும் பார்த்திருக்க முடியும், இதில் புதிதாகப் பார்ப்பதற்கு எதுவுமில்லை” என்று குறிப்பிட்டுள்ளார். 

Share this Article
Leave a comment