கொழும்பு கல்கிசை பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த இங்கிலாந்து பெண் தொடர்பில் மேலும் சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்றுமுன்தினம் (செப்ரெம்பர் 10) வெளிநாடு செல்ல தயாராகிக்கொண்டிருந்த 27 வயதுடைய இளம் பெண் ஒருவர் கொழும்பு-கல்கிஸ்ஸை அடுக்குமாடி குடியிருப்பொன்றின் வீட்டில் வசித்து வந்த நிலையில் மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
விசாரணைகளில் இங்கிலாந்து குடியுரிமை பெற்ற குறித்த பெண், தனது 29 வயது காதலனுடன் சுமார் 6 மாதங்களாக அங்கு தங்கியிருந்ததாக தெரியவந்துள்ளது.
வெள்ளவத்தையில் வசிக்கும் 29 வயதுடைய சட்டக்கல்லூரி மாணவனான தனது காதலனை சந்திப்பதற்காக கடந்த மார்ச் மாதம் 8 ஆம் திகதி குறித்த பெண் நாட்டுக்கு வந்திருந்ததாகவும் குறித்த இளைஞன் கடந்த வருடம் சுவிட்சர்லாந்தில் கல்வி பயின்று நாட்டிற்கு வந்துள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இருவரும் அடுக்குமாடி குடியிருப்பில் ஒன்றாக வசித்து வந்ததுடன் இருவருக்கும் இடையே மதம் தொடர்பாக சிறு வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் இதன் பின்னர் சுமார் 6 மதுபான போத்தல்களை குறித்த இளைஞர் அருந்தியுள்ள நிலையில், இரவு உறங்கச் சென்ற போது காதலியிடம் இருந்து பதில் வராத காரணத்தினால் காதலியை தேடிய போதே சடலத்தை கண்டதாக பொலிஸாரிடம் இளைஞர் கூறியுள்ளார்.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் பிற்பகல் கல்கிஸ்ஸை பதில் நீதவான் ரத்ன கமகே சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டார்.
இதற்கமைய, பிரேத பரிசோதனையின் பின்னர் இது கொலையா அல்லது தற்கொலையா என்பது தெரியவரும் எனவும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்