அவசர உதவியை விரைவாகப் பெற SOS வசதியுடன் பொலிஸாரின் புதிய செயலி!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

ஒருவர் ஆபத்தில் இருக்கும்போது பொலிஸாருக்கு விரைவாகத் தகவல் வழங்கக்கூடிய SOS அவசரகால பொத்தானுடன் புதிய கையடக்கத் தொலைபேசி செயலியை இலங்கை பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

SOS பொத்தானை குறிப்பிட்ட நேரம் அழுத்திப் பிடித்தவுடன், பயனர் இருக்கும் இடம் தொடர்பான தகவல் அந்தப் பிரதேசத்திற்குப் பொறுப்பான பொலிஸ் அதிகாரிகளுக்கு அனுப்பப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்தார்.

அவசரநிலையின்போது வழக்கமான தொலைபேசி அழைப்பை மேற்கொள்வதைவிட விரைவாகப் பொலிஸ் உதவியைப் பெற்றுக்கொள்வதற்காக இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பாடசாலையிலிருந்து வீடு திரும்பும் சிறுவர் அல்லது இளைஞர் ஒருவர் கடத்தல் முயற்சி, தாக்குதல் அல்லது வேறு அச்சுறுத்தலை எதிர்கொள்ளும்போது, இந்த SOS வசதியைப் பயன்படுத்தி உடனடியாகப் பொலிஸாருக்குத் தகவல் வழங்க முடியும்.

தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தி இந்தச் செயலியில் பதிவு செய்துகொள்ளலாம். தேசிய அடையாள அட்டை இல்லாத சிறுவர்கள் பெற்றோரின் அடையாள விவரங்களைப் பயன்படுத்திப் பதிவு செய்ய முடியும். வெளிநாட்டவர்கள் தங்களது கடவுச்சீட்டைப் பயன்படுத்திப் பதிவு செய்யலாம்.

குற்றச் செயல்கள், போக்குவரத்து விதிமீறல்கள், சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்பு, இணைய மோசடிகள், போதைப்பொருள் குற்றங்கள் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கான உதவி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பான தகவல்களை விசேட பொலிஸ் பிரிவுகளுக்கு நேரடியாக அனுப்பும் வசதியும் இதில் உள்ளது.

அவசரகால அறிவிப்புகள், ஏற்கனவே நடைமுறையிலுள்ள பொலிஸ் சேவைகளுக்கான அணுகல் மற்றும் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கான உரையாடல் உதவியாளர் உள்ளிட்ட வசதிகளும் செயலியில் இணைக்கப்பட்டுள்ளன.

எனினும், SOS அவசரகால வசதியைத் தவறாகப் பயன்படுத்தக்கூடாது எனப் பொலிஸார் எச்சரித்துள்ளனர். 2025ஆம் ஆண்டில் 119 பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்தைத் தவறாகப் பயன்படுத்திய 91 பேருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பொலிஸ் தகவல் தொழில்நுட்பப் பிரிவு, பொலிஸ் ஊடகப் பிரிவு மற்றும் தனியார் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இந்தச் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

Share this Article
Leave a comment