வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அரச நிறைவேற்று அதிகாரிகள் நாளை (20/11) ஒருநாள் அடையாளப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
“நாளைய தினம் அரச நிறைவேற்று அதிகாரிகள் கூட்டுக் குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 20 தொழிற்சங்கங்களுடன் இணைந்து நாடளாவிய ரீதியில் ஒருநாள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளோம்.
அரச நிறைவேற்று அதிகாரிகள் கூட்டுக் குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 20 நிறைவேற்றுத் தரங்களைப் புறக்கணித்துவிட்டு, 2027 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் ஊடாக இந்நாட்டின் நிறைவேற்றுச் சேவைகளில் தெரிவுசெய்யப்பட்ட சில துறைகளுக்கு மாத்திரம் அரசாங்கத்தினால் கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளமையே இதற்கு உண்மையான காரணமாகும்” என அக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் 25,000 ரூபா இடைக்காலக் கொடுப்பனவு வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, எதிர்வரும் நவம்பர் 23 ஆம் திகதி அதிபர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அதிபர் தர அதிகாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் நிமல் முதுன்கொட்டுவ தெரிவித்துள்ளார்.
“தற்போது முன்பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை கல்விசார்ந்த அனைத்து நிறுவனங்களினதும் ஊழியர்கள் தமது எதிர்ப்புகளை வெளியிட்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள். அவர்கள் அனைவருக்கும் 25,000 ரூபா இடைக்காலக் கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையைத் தொழிற்சங்கங்கள் முன்வைத்து வருகின்றன. எதிர்வரும் 23 ஆம் திகதி போராட்டத்தை முன்னெடுப்பதற்காக 7 பிரதான அதிபர் சங்கங்களும் சுமார் 20 ஆசிரியர் சங்கங்களும் ஒன்றிணைந்து அணிதிரண்டுள்ளன” என அவர் மேலும் குறிப்பிட்டார்.