ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசின் “1000 கிராமிய வீதிகள் அபிவிருத்தி” திட்டத்தின் ஒரு கட்டமாக, வேலணை பிரதேசத்தின் அல்லைபிட்டி அலுமினியம் தொழிற்சாலை வீதியை காப்பெட் வீதியாக அபிவிருத்தி செய்வதற்கான பணிகள் இன்று சனிக்கிழமை (ஜனவரி 03) ஆரம்பித்து வைக்கப்பட்டன.

மக்களின் அத்தியாவசிய தேவையை கருத்தில் கொண்டு, தேசிய மக்கள் சக்தியின் வேலணை பிரதேச சபை உறுப்பினர் ஆனந்தராசா சதீஸ்குமாரின் திட்ட முன்மொழிவின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட இவ்வீதியின் அபிவிருத்தி பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
1000 கிராமிய வீதிகள் அபிவிருத்தி திட்டத்தின் முதற்கட்டமாக வட மாகாணத்தில் 25 வீதிகள் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், வேலணை பிரதேசத்தில் ரூ. 30.7 மில்லியன் நிதிச் செலவில், 1.3 கிலோமீற்றர் நீளமுடைய இந்த வீதி காப்பெட் மற்றும் கொங்கிறீட் ஆகிய இரு வகைகளிலும், அப்பகுதியின் இயற்கை நீரோட்டத்திற்கு ஏற்ற வகையில் நிர்மாணிக்கப்படவுள்ளது.

குறிப்பிடத்தக்கதாக, அலுமினியம் தொழிற்சாலை வீதி கடந்த 50 ஆண்டுகளாக, வீதி உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து எந்த நிரந்தர அபிவிருத்தியையும் காணாமல் இருந்த நிலையில், தற்போது இந்த அபிவிருத்தி மூலம் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறியுள்ளதாக அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
இதனிடையே, அப்பகுதியில் உள்ள மற்றொரு அவசியமான வீதியான மண்டைதீவு இணைப்பு வீதியையும் அபிவிருத்தி செய்து தருமாறு மக்கள், நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவனிடம் கோரிக்கை விடுத்தனர்.
மக்களின் கோரிக்கையின் நியாயத்தை கருத்தில் கொண்டு, குறித்த வீதியின் அபிவிருத்தி பணிகள் விரைவில் முன்னெடுக்கப்படும் என்றும், அதற்கு முன்னதாக அந்த வீதியில் அமைக்கப்படவுள்ள பாலத்திற்காக சுமார் ரூ. 60 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் தெரிவித்தார். பாலப் பணிகள் நிறைவடைந்த பின்னர், வீதி அபிவிருத்திக்கான மேலதிக நிதி பெற்றுத் தரப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், ஜனாதிபதி அனுர கிராம மக்களின் நலனில் விசேட அக்கறை செலுத்தி வருவதால், மக்களின் எதிர்பார்ப்புகள் விரைவில் நிறைவேறும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.