நெடுக்குநாறி பகுதியில் அமைந்துள்ள ஆதிலிங்கேசுவரர் ஆலயத்தின் சிலைகள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் உடைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த சிலைகள் இன்று (ஏப்ரல் 28) மீளவும் அதே இடத்தில் மீள்பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
வெடுக்குநாறி மலையிலிருந்து அகற்றப்பட்ட விக்கிரகங்களை மீண்டும் அங்கு பிரதிஷ்டை செய்யுமாறு வவுனியா நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
விக்கிரகங்கள் இன்றி அங்கு வழிபாடுகள் நடத்தப்பட்டமை தொடர்பிலும், வெடுக்குநாறி மலையிலிருந்த விக்கிரகங்களும் பூஜை பொருட்களும் பொலிஸாரின் கட்டுப்பாட்டிலுள்ளதாகவும் பாதிக்கப்பட்டோர் தரப்பு நீதிமன்றில் நேற்று சுட்டிக்காட்டியது.
விடயங்களை ஆராய்ந்த வவுனியா நீதவான், வெடுக்குநாறி மலையிலிருந்து எடுத்துச்செல்லப்பட்ட சிலைகளை அதே இடத்தில் மீண்டும் பிரதிஷ்டை செய்யுமாறும், பூஜை பொருட்களை சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கையளிக்குமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், வெடுக்குநாறி ஆதிலிங்கேசுவவர் ஆலய பகுதியில் இருந்த சிலைகளை மீளவும் அதே இடங்களில் நிறுவுவதற்கு ஆலய நிர்வாகத்தினர் நடவடிக்கைகளை மேற்கொண்ட நிலையில் இன்று மீளவும் அதே இடத்தில் மீள்பிரதிஷ்டை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.