அதிகரித்து வரும் வீதி விபத்துகளைத் தடுக்கும் நோக்கில், சரியான வீதி விதிமுறைகள் குறித்து பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வு ஊர்காவற்றுறை பொலிஸாரால் வேலணை மத்திய கல்லூரியில் நடத்தப்பட்டது.
வேலணை மத்திய கல்லூரி அதிபரின் முழுமையான ஒத்துழைப்புடன், ஊர்காவற்றுறை வீதிப் போக்குவரத்து பிரிவுப் பொலிஸாரின் ஒழுங்கமைப்பில், கடந்த வியாழக்கிழமை (நவம்பர் 06) காலை, கல்லூரி வளாகம் முன்பாக இந்த நிகழ்வு இடம்பெற்றது.

ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையப் பிரதானி பொலிஸ் பரிசோதகர் பிரபாகரன் தலைமையில், உதவி பொலிஸ் அதிகாரி சமன் குமார முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாணவர்களுக்கு வீதி ஒழுங்கு மற்றும் போக்குவரத்து விதிகள் குறித்து செயன்முறை விளக்கங்கள் அளிக்கப்பட்டன. மேலும், விதிமுறைகளை பின்பற்றாத போக்குவரத்தால் ஏற்படும் அபாயங்கள் குறித்து மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் எடுத்துக்கூறப்பட்டது.
இவ்விழிப்புணர்வு நிகழ்வில் வேலணை மத்திய கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.