வழிப்பறியில் ஈடுபட்டு வந்த கும்பல் ஒன்று பொலிஸாரால் கைது!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

மானிப்பாய் பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த போதைக்கு அடிமையான கும்பல் ஒன்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த கும்பலை சேர்ந்த நால்வர், நீதிமன்ற உத்தரவில் கந்தக்காடு மறுவாழ்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மானிப்பாய் பகுதிகளில் வீதியில் செல்லும் பொதுமக்களிடம் நேரம் கேட்பது, வழி கேட்பது போன்று பாசாங்கு செய்து வழிப்பறியில் இந்த கும்பல் ஈடுபட்டு வந்துள்ளது. அத்தோடு இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் ஐந்து துவிச்சக்கர வண்டிகளையும் திருடியுள்ளனர்.

இவை தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களால் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

அதன் அடிப்படையில், சாவற்காட்டு பகுதியை சேர்ந்த 20 மற்றும் 21 வயதுக்குட்பட்ட ஐவரை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், திருடப்பட்ட ஐந்து துவிச்சக்கர வண்டிகளும் அவர்களிடம் இருந்து மீட்கப்பட்டன.

அதனையடுத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் ஐவரையும் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் முற்படுத்தி, மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியபோது, அவர்களில் நால்வர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் என கண்டறியப்பட்டது.

அதன் பின்னர் மருத்துவ அறிக்கையுடன் ஐவரையும் பொலிஸார் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியபோது, அவர்களில் போதைக்கு அடிமையான நால்வரையும் பொலன்னறுவை, கந்தக்காடு மறுவாழ்வு மையத்துக்கு அனுப்ப உத்தரவிட்ட நீதவான், மற்றைய நபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

Share this Article