உள்ளூராட்சி மன்றங்களில் அமைய மற்றும் ஒப்பந்த அடிப்படையில் சுகாதாரத் தொழிலாளர்களாகவும், வேலை வெளிக்களத் தொழிலாளர்களாகவும் 180 நாட்களைக் கடந்து தொடர்ச்சியாகக் கடமையாற்றும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், வடக்கு மாகாணத்தில் ஆகக்குறைந்தது மூன்று வருடங்கள் தொடர் சேவையில் ஈடுபட்டு வரும் 406 வெளிவாரிப் பணியாளர்கள் இந் நியமனத்திற்குள் உள்ளீர்க்கப்படாததால் மிகமோசமான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயமாக வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் அவரால் சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட 406 வெளிவாரித் தொழிலாளர்களது விவரப்பட்டியல் உள்ளடங்கலாக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் ஆகியோருக்கு தனித்தனியே அனுப்பிவைக்கப்பட்ட கடிதங்களிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அக்கடிதங்களில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
உள்ளூராட்சி மன்றங்களின் சேவைப்பரப்பினுள் அடங்கும் திண்ம, திரவக் கழிவகற்றல், பொதுச் சந்தைகள் மற்றும் குத்தகை நிலையங்களின் மேற்பார்வை, வரி அறவீடு, காவற்கடமை உள்ளிட்ட இடர்மிகு பணிகளை ஏராளமான சமூகச் சிக்கல்களுக்கும் சவால்களுக்கும் மத்தியில் செவ்வனே நிறைவேற்றி வந்த இத்தொழிலாளர்கள், என்றோ ஒரு நாள் தமக்கான நிரந்தர நியமனம் வழங்கப்படும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே நீண்டகாலம் தொடர்ச்சியாக கடமையாற்றி வருகின்றனர்.
ஆளணி முகாமைத்துவத்தை இலகுபடுத்தும் நோக்கில் வடக்கு மாகாணசபையில் நடைமுறையிலுள்ள தீர்மானத்தின் அடிப்படையில், குறித்த ஓர் உள்ளூராட்சி மன்றத்தின் நிருவாக எல்லைக்குள் இயங்குகின்ற பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள், சனசமூக நிலையங்கள் உள்ளிட்ட சமூகமட்ட நிறுவனங்களும் உள்ளூராட்சி மன்றங்களும் செய்துகொண்ட ஒப்பந்தங்களின் அடிப்படையிலேயே மேற்குறித்த 406 வெளிவாரித் தொழிலாளர்களும் உள்ளூராட்சி மன்றங்களின் ஒப்பந்தப் பணியாளர்களாக இணைத்துக் கொள்ளப்பட்டனர்.
இவர்களுக்கான தினவரவுப் பதிவு, மாத வேதனம், விடுமுறை உள்ளிட்ட சலுகைகள், உரிமைகள் அனைத்தும் அந்தந்த உள்ளூராட்சி மன்றத்தினாலேயே நிருவகிக்கப்படுகின்ற போதும், வெளிவாரி அடிப்படையில் கடமையாற்றும் இவ் ஊழியர்களை நிரந்தர நியமனத்தில் உள்ளீர்ப்பதில் நிருவாக இடர்பாடுகள் இருப்பதாகக்கூறி அவர்களது நிரந்தர நியமனம் நிராகரிக்கப்பட்டுள்ளமை, உள்ளூராட்சி மன்றங்களை முழுமையாக நம்பியிருந்த அத்தொழிலாளர்களையும் அவர்களது குடும்பங்களையும் வாழ்வாதார ரீதியான பிடிமானங்களற்று அந்தரிக்கும் நிலைக்கு கொண்டுவந்துள்ளது.
எனவே, இதுவிடயமாக தாங்கள் உயரிய கரிசனை கொண்டு உள்ளூராட்சி மன்றங்களில் நிலவும் அட்டவணைப் படுத்தப்படாத பதவிகளுக்கு நியமனம் வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ், வெளிவாரி அடிப்படையிலான ஒப்பந்தப் பணியாளர்களாக வடக்கு மாகாணத்தில் கடமையாற்றும் 406 தொழிலாளர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்க ஆவனசெய்வதன் மூலம், அவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் வாழ்வளிக்க முன்வர வேண்டுமென்று தங்களைத் தயவுடன் கேட்டுக் கொள்கின்றேன். – என்றுள்ளது.