வடக்கு மாகாண கல்வி அபிவிருத்தி தொடர்பாக துறைசார் நிபுணர்களுடனான கலந்துரையாடல் இன்று புதன்கிழமை (ஒக். 29) யாழ்ப்பாணத்தில், அரச சார்பற்ற சொன்ட் நிறுவனம் ஏற்பாடு செய்தமைக்குள் நடைபெற்றது.
இந்த கலந்துரையாடலில், வட மாகாண கல்வி துறையில் நிலவும் சவால்கள் மற்றும் அவற்றை சமாளிக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நிபுணர்கள் விரிவாக கருத்துகளைப் பகிர்ந்தனர். குறிப்பாக, பாடசாலைகளில் மாணவர்களின் வரவு குறைவு, பாடநெறி சார்ந்த சிரமங்கள், மற்றும் முன்பள்ளிகளின் மேம்பாடு தொடர்பான விடயங்கள் முக்கியமாக விவாதிக்கப்பட்டன.
முன்பள்ளிகளின் அபிவிருத்திக்காக பிரதேச அடிப்படையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், பிரதேச சபைகளுடன் இணைந்து மாதிரி முன்பள்ளி ஒன்றை நிறுவி அதற்கான பயிற்சிகளை வழங்குவதற்கான திட்டமும் தீர்மானிக்கப்பட்டது.
மேலும், நகர்ப்புற பாடசாலைகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பின் விளைவாக கிராமப்புற பாடசாலைகள் மூடப்படும் அபாயம் இருப்பதை கருத்தில் கொண்டு, நகர்ப்புறங்களில் வகுப்புகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் பற்றி உரிய தரப்பினருடன் ஆலோசனை நடத்த தீர்மானிக்கப்பட்டது.
வட மாகாணக் கல்வி தொடர்பான கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் குறித்து தேவையான மாற்றங்களைப் பற்றி வட மாகாண ஆளுநருடன் எதிர்வரும் வாரங்களில் சந்தித்து கலந்துரையாடவும் முடிவு எடுக்கப்பட்டது.
இந்த கலந்துரையாடலில், சொன்ட் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் செந்தூர் ராஜா, வாழ்நாள் பேராசிரியர் பொன் பாலசுந்தரம் பிள்ளை, வவுனியா பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் மோகனதாஸ், முன்னாள் மாகாண கல்வி பணிப்பாளர்கள் உதயகுமார் மற்றும் ஜோன் குயின்ரஸ், மேலும் எந்திரி சூரியசேகரம் கல்வி ஆலோசனைக் குழு உறுப்பினர் சச்சிதானந்தம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.