2026 ஜனவரி 1ஆம் திகதி முதல் வட மாகாணம் முழுவதும் லஞ்சீட் (Lunch Sheet) பயன்பாட்டுக்கு தடை விதித்து, அதன் மாற்றாக வாழை இலைப் பயன்படுத்துவதற்குத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவு, வட மாகாண ஆளுநர் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் எட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது, இதுவரை அந்தத் தீர்மானத்தை அமுல்படுத்தாத உள்ளூராட்சி மன்றங்கள் உடனடியாக அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் ஒருவழிப் பாதைகள் அறிமுகப்படுத்தல் மற்றும் கனரக வாகனங்களுக்கு நேரக் கட்டுப்பாடுகள் விதித்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
எதிர்வரும் மழைக்காலத்தை முன்னிட்டு, வெள்ளநீர் வடிகாலில் தடையாக உள்ள சட்டவிரோதக் கட்டிடங்கள் உடனடியாக அகற்றப்பட வேண்டும் எனவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், தனியார் கல்வி நிறுவனங்களில் உரிய சுகாதார வசதிகள் இல்லாதமை குறித்து கவனம் செலுத்த வேண்டிய அவசியத்தையும் கூட்டத்தில் சுட்டிக்காட்டினர். பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மூலமாக அவற்றை கண்காணித்து தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.