அனர்த்தத்தின் பின்னரான நிலமைகளில் எடுக்கப்பட்ட மற்றும் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக பிரதேச செயலாளர்களுடன் யாழ் அரசாங்க அதிபர் கலந்துரையாடல் ஒன்றினை நேற்றையதினம் (03/12) காலை அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடாத்தியிருந்தார்.
அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம், அனர்த்த நிலமைகளுக்குப் பின்னராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் எடுத்து வரும் நடவடிக்கைகள் தொடர்பாக கடமையாற்றிய பிரதேச செயலாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு தமது நன்றியினைத் தெரிவித்த அரச அதிபர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கிய உதவிகள் வழங்கிவருவதனையும், வெள்ள தணிப்பு நடவடிக்கைகளிலும் விரைவாக செயற்பட்டதனையும் குறிப்பிட்டார்.
மேலும், சரியான தகவல்களையும் புள்ளிவிபரங்களையும் பேணுவதன் அவசியத்தினை அரசாங்க அதிபர் குறிப்பிட்டு உரிய நேரத்தில் அறிக்கையிடல் வேண்டும் எனவும், இதன் மூலம் வினைத்திறனாக செயற்பட முடியும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்ததுடன், அனைவரையும் கூட்டுப் பொறுப்புடனும் வினைத்திறனாகவும் செயற்பட ஒத்துழைப்பு நல்குமாறும் கேட்டுக் கொண்டார். ஒவ்வொரு பிரதேச செயலக ரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் எடுத்து வரும் நடவடிக்கைகளை கேட்டறிந்து உரிய அறிவுறுத்தல்களை வழங்கினார்.
யாழ் மாவட்டத்தின் மொத்த குடும்ப எண்ணிக்கையில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களாக 7.9% வீதமானவர்கள் காணப்படுவதுடன் அனர்த்தினால் பாதிக்கப்பட்டவர்களின் வீட்டை சுத்தம் செய்வதற்கும் துப்பரவுப் பணிகளை மேற்கொள்வதற்கும், வீட்டு உபகரணங்களை மீட்டெடுப்பதற்கும், சமூக பொருளாதார அதிர்ச்சிகளை நிர்வகிப்பதற்கும் தலா 25,000.00 வீதம் உடனடியாக வழங்குவதற்கு அதிமேதகு சனாதிபதி அறிவுறுத்தியதற்கு அமைவாக, தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தால் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதேச செயலகங்களுக்கு உடனடியாக நிதி விடுவிக்கப்படும் எனவும் சுற்றுநிருபத்திற்கு அமைய கொடுப்பனவுகளை விரைவுபடுத்துமாறு பிரதேச செயலாளர்களைக் கேட்டுக் கொண்டார்.
இதேவேளை பாதிக்கப்பட்ட மக்களுக்கான அத்தியாவசிய பொருட்களை தேவைப்பாடுகளை அரசாங்க அதிபர் கேட்டறிந்து, அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் பொது அமைப்புக்கள் தாமாகவிரும்பி மாவட்டச் செயலகத்தில் ஒப்படைக்கப்படும் பொருட்களை தேவைக்கு ஏற்ப பங்கீடு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.