ஓய்வூதியம், ஊழியர் சேமலாப நிதியம் (EPF) ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் (ETF) தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ. சிவபாலசுந்தரனின் தலைமையில் கடந்த 14 ஆம் திகதி முற்பகல் 8.30 மணி தொடக்கம் பிற்பகல் 4.00 மணி வரை யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடாத்தப்பட்டது.
முதியோர்களுக்கான தேசிய செயலகத்தின் அனுசரணையுடன் மாவட்ட செயலகத்தினால் “ஓய்விற்கு முன்னர் ஆயத்தமாதல் – செயற்திறனான முதுமைப்பருவம்” எனும் தொனிப்பொருளினை மையமாகக் கொண்டு அரச, பகுதியளவு அரச (Semi Government ) மற்றும் தனியார் துறைகளில் கடமையாற்றும், ஓய்விற்கு தயாராகும் 50 வயதிற்கு மேற்பட்ட உத்தியோகத்தர்களுக்கே இந்த விழிப்புணர்வு செயலமர்வு இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் உத்தியோகத்தர்கள் ஓய்விற்குத் தயாராகும்போது எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் குறைப்பதற்கும் சமூகமயமாதல் மற்றும் முதுமைப் பருவத்தினை செயற்திறனாக எதிர்கொள்வதனை இலக்காகக்கொண்டு இந்நிகழ்ச்சி நடாத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் “ஓய்விற்கு முன்னர் ஆயத்தமாதல் – செயற்திறனான முதுமைப் பருவம்” எனும் ஓய்வூதிய நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கம் தொடர்பாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களும், “ஊழியர் சேமலாப நிதியம் (EPF) பெற்றுக்கொள்ளும்போது நபரின் சுய கோவை தயார்ப்படுத்தப்பட்டுள்ளதா?” என்பது தொடர்பாக தொழிற்திணைக்கள உதவி ஆணையாளர், திரு.அ.அ.தனேஷ் அவர்களும், “ஓய்வு காலத்தில் உடலியல் மற்றும் உளவியல் நலம் தொடர்பாக யாழ்.போதனா வைத்தியசாலை உள வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி. எஸ்.சிவதாஸ் அவர்களும், “ஓய்வூதியம் பெற்றுக்கொள்ளும்போது நபரின் சுய கோவை தயார்ப்படுத்தப்பட்டுள்ளதா?” என்பது தொடர்பாக யாழ் பிரதேச செயலக கணக்காளர், திரு.க.சிறீதரன் அவர்களும், “திட்டமிடப்பட்ட முதுமைப் பருவம்” ஓய்வினைக் கழிப்பதில் முதியோர் சமூகமயமாதலுக்கு செயற்திறனாக முகங்கொடுக்க வழிகாட்டல் தொடர்பாக மாவட்ட செயலக முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் திருமதி.ஸ்பெல்மன் பாலகுமாரி ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டு கருத்துரைகள் வழங்கினார்கள்.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், உதவி மாவட்டச் செயலாளர் உட்பட மாநகர சபை, பிரதேச சபை, பிரதேச செயலகங்கள், வலயக் கல்வி அலுவலகம், விவசாய மற்றும் கமநலசேவை காப்புறுதிச் சபை ,தென்னை பயிர்ச்செய்கை சபை ,நீர்ப்பாசனத் திணைக்களம் ,கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களம் ,தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை ,பனை அபிவிருத்தி சபை ,பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை ,இலங்கை மின்சார சபை ,பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ,வீதி அபிவிருத்தி அதிகாரசபை , இலங்கை போக்குவரத்துச்சபை , சமூக சேவைகள் திணைக்களம், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை , கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களம் ஆகிய திணைக்களங்களைச் சார்ந்த 50 வயதிற்கு மேற்பட்ட உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.