போதைக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். போதைப் பாவனை தொடர்பாக நாளாந்தம் ஊடகங்களில் வரும் செய்திகள் மிகுந்த கவலை தருவனவாக உள்ளன. அத்துடன் நாளாந்தம் எமது அலுவலகத்திற்கு இது தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுகின்றன. இவை அனைத்தும் இந்த சமூகத்தின் பொறுப்பு மிக்கவர்கள் என்ற ரீதியில் எமக்கு மிகுந்த கவலையை தருவதாக உள்ளதுடன் இதற்கு எதிராக நாம் அணைவரும் இணைந்து செயலாற்ற வேண்டும் என்று
தெல்லிப்பழை உதவிப் பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியா சைவத் திருக்கோவில்களின் ஒன்றியத்தின் அனுசரணையுடன் சர்வோதம் நிறுவனத்தின் ஏற்பாட்டில் பிரதேச மட்டத்தில் ஒன்றிணைந்த பொறிமுறை ஒன்றினுடாக, போதைக்கு எதிராக பணியாற்ற வேண்டியதன் அவசியத்தினை வலிறுத்தி பொது செயல்முறை ஒன்றை தெல்லிப்பழை பிரதேசத்தில் அமைப்பது பற்றிய சிறப்பு ஒன்று கூடல் இன்று(மே 8) பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
இவ் விசேட ஒன்று கூடலினை தலைமை தாங்கி தனது விசேட கருத்துக்களை உதவிப் பிரதேச செயலாளர் தெளிவாக முன்வைத்தார்.
சமூகத்தின் பல்வேறு நிலைகளில் இந்த போதைப் பாவனை மிக வேகமாக வளர்ந்துள்ளது. நம் கண் முன்னே பல மாணவர்கள் கூட இதற்கு அடிமையாகி தமது பெறுமதியான வாழ்வையும் கல்வியினையும் தொலைத்து நிற்கின்றார்கள்.
இவ்வாறானவர்களை இதிலிருந்து மீட்பது மட்டுமல்லாது ஏனையவர்களையும் இந்த கொடிய தாக்கத்தில் இருந்து பாதுகாக்க வேண்டிய சமூகப் பொறுப்பு என்பது நம் அனைவருக்கும் உள்ளதால், இந்த சமூகத்தின் நன்மை கருதி நாம் ஒன்றாக இணைந்து பணியாற்ற வேண்டும்.
எமது பிரதேசத்தில் பணியாற்றும் பல்வேறு தரப்பினரையும் ஒன்றிணைத்து ஒரு பொது வேலைத் திட்டத்தின் கீழ்,
போதைப் பாவனைக்கு எதிராக பணியாற்ற வேண்டியதன் அவசியம் இன்றைய இவ் சிறப்பு கூட்டத்தில் உதவிப் பிரதேச செயலாளரால் வலியுறுத்தப்பட்டதுடன் எதிர்காலத்தில் பல ஆக்கபூர்வமான நடைமுறைக்கு பலன் உள்ள திட்டங்களை தயாரித்து போதைப் பாவனைக்கு எதிராக, ஒன்றிணைத்து பணியாற்ற சகல விதமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.