பிரான்ஸ் தலைநகர் பரிசில் ஆண்டுதோறும் நடத்தப்படும் ‘சிறந்த பாண் உற்பத்தியாளருக்கான’ போட்டியில், இந்த ஆண்டுக்கான விருதை இலங்கையைச் சேர்ந்த தர்ஷன் செல்வராஜா வென்றுள்ளார்.
‘பரிசின் சிறந்த பாண்’ (La meilleure baguette de Paris) எனும் போட்டி 30 ஆவது முறையாக இம்முறையும் இடம்பெற்றது.
இந்தப் போட்டியில், 126 பேர் பிரான்சின் பாரம்பரியம்மிக்க baguette பாணை தயாரித்து போட்டிக்கு அனுப்பியிருந்தனர்.
இதில் பரிசின் 20 ஆம் பிரிவில் வெதுப்பகம் வைத்து நடத்திவரும், 30 வயதான தர்ஷன் செல்வராஜா தயாரித்த பாணின் தரம் மற்றும் சுவை நடுவர்களைக் கவர்ந்து, முதல் பரிசை வென்றிருக்கிறது.
அத்தோடு பிரான்சின் ஜனாதிபதிக்கு, அவரது எலிசே மாளிகையில், அடுத்துவரும் ஓர் ஆண்டுக்கு பாண் தயாரிக்கும் வாய்ப்பும் தர்ஷன் அவர்களுக்குக் கிட்டியிருக்கிறது.