பத்திரிகை நிறுவனத்துக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்ட போதகர் தலைமையிலான குழு கைது!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read
உதயன் பத்திரிகை தலைமையகத்துக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்ட கிறிஸ்தவ போதகர் குழுவைச் சேர்ந்த 6 பேர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் இன்று (ஏப்ரல் 10) யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில், அவர்களை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டது.
அச்சுவேலிப் பகுதியிலுள்ள கிறிஸ்தவ சபை ஒன்றின் போதகர் உட்பட 30 பேர் கொண்ட குழு ஒன்று நேற்று யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியிலுள்ள உதயன் பத்திரிகை தலைமையகத்துக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்டது.
கிறிஸ்தவ சபையின் போதகர் உட்பட மூவர் கடந்த வெள்ளிக்கிழமை வீடொன்றுக்குள் புகுந்து அங்கிருந்த பெண்களைத் தாக்கி அச்சுறுத்தியமை தொடர்பில் அச்சுவேலிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுப் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
அது தொடர்பான செய்தியை வெளியிட்டமைக்காகவே போதகரும் குழுவினரும் உதயன் தலைமையகத்துக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்டனர்.
உதயன் ஆசிரியர் பீடப் பணியாளர்களைச் சூழ்ந்து அச்சுறுத்தித் தாக்க முயன்றதுடன், உதயன் பணியகத்துக்குள் பணியில் இருந்தவர்களை காணொலி பதிவு செய்து அச்சுறுத்தியதுடன், அநாகரிகமாக நடந்து கொண்டமை, செய்தியை வழங்கியவர்களை இனங்காட்ட வேண்டும் என்று அச்சுறுத்தியமை போன்ற பல்வேறு அடாவடிச் செயல்களில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். இன்று காலை இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையோரைக் கைது செய்யும் நடவடிக்கைள் யாழ்ப்பாணம் பொலிஸாரால் முன்னெடுக்கப்படுகின்றன. ஏனையோரும் கைது செய்யப்பட்டு விரைவில் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
Share this Article