நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட மக்கள் குறைகேள் சந்திப்பில் பங்குகொள்வதற்காக நெடுந்தீவுக்கான விஜயத்தை இன்று (மார்ச் 05) மேற்கொண்டிருந்த வடமாகாண ஆளுநர் மற்றும் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் அதிகாரிகள் நெடுந்தீவிலுள்ள உயர்தர பாடசாலைகளுக்கு விஜயம் செய்து நிலைமைகளை நேரடியாக ஆராய்ந்தனர்.
நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம், நெடுந்தீவு றோ. க. மகளிர் கல்லூரி, நெடுந்தீவு மகா வித்தியாலயம் என்பனவற்றுக்கு நேரடியாக சென்ற ஆளுநர் பாடசாலைகளின் குறைபாடுகள் தொடர்பிலும் கேட்டறிந்துகொண்டார்.
இதேவேளை நெடுந்தீவு றோ. க. மகளிர் கல்லூரியின் ஆரம்பப் பிரிவுக்கு புதிய கட்டடம் அமைப்பதற்கு மாகாண குறித்தொதுக்கப்பட்ட நன்கொடை நிதியில்நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஆளுநருக்கு, வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலர் ம.பற்றிக் டிறஞ்சன் இதன்போது தெரிவித்தார். அதேபோன்று ஏனைய பாடசாலைகளின் கட்டடங்களின் திருத்த வேலைக்காகநிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆசிரிய விடுதிகள் அமைப்பதற்குப் பதிலாக, நெடுந்தீவிலுள்ள வீடுகளை நீண்டகால குத்தகை அடிப்படையில் பயன்படுத்துவது தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டது.
நெடுந்தீவில் பாடசாலைகளுக்கான ஆசிரிய நியமனம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டதுடன் படகுச் சேவையின் நேரத்தை கருத்தில் கொண்டு நெடுந்தீவிலுள்ள பாடசாலைகளை ஆரம்பிக்கும் நேரத்தை மாற்றியமைப்பது தொடர்பில் ஆராய்வதாக கல்வி அமைச்சின் செயலர் இங்கு குறிப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.