அங்குருவாதொட்ட – படகொட பகுதியில் அமைந்துள்ள “செனெஹசே கெந்தல்ல” முதியோர் பராமரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரச செலவில் இறுதிச்சடங்குகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து கடந்த 3ஆம் திகதி இடம்பெற்ற நிலையில், இதுவரை உறவினவர்களால் பொறுப்பேற்கப்படாத உடல்களின் இறுதிச்சடங்குகளை அரச செலவில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணை, ஹொரணை நீதவான் லக்மினி விதானகமகே தலைமையில் கடந்த 04ஆம் திகதி காலை சம்பவ இடத்திற்குச் சென்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, தீயில் கருகிய 9 உடல்கள் அந்த வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
அதன் பின்னர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் 4 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 13 ஆக உயர்ந்துள்ளது.
உயிரிழந்த அனைவரின் பிரேதப் பரிசோதனைகளும் இன்று(06.06) ஹொரணை ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்று
பின்னர் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இதுவரையில் உறவினர்களால் பொறுப்பேற்கப்படாத உடல்களின் இறுதிச்சடங்குகள் அரசின் செலவில் நடத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் அந்த பராமரிப்பு நிலையத்தில் 71 பேர் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், தீக்காயங்களுக்குள்ளான 5 பேர் தற்போது ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.