யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் வேலணை பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய நடமாடும் சேவையானது வேலணை பிரதேச செயலாளர் தனபாலசிங்கம் அகிலன் தலைமையில் நேற்றையதினம் (நவம்பர்18) நயினாதீவு அமுதசுரபி மண்டபத்தில் இடம்பெற்றது

யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கைலாசபிள்ளை சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) பா.ஜெயகரன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது

இந் நடமாடும் சேவையில் ஆட்களைப் பதிவுசெய்யும் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள் ,ஓய்வூதியம் தொடர்பான சேவைகள், பிறப்பு, இறப்பு மற்றும் உத்தேச வயது சான்றிதழ்கள் தொடர்பான சேவைகள், மோட்டார் வாகன பதிவு மற்றும் வாகன வருமான அனுமதிப்பத்திரம் தொடர்பான சேவைகள், பிரதேச சபைகளால் வழங்கப்படும் சேவைகள், பொலிஸ் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள், மனிதவள அபிவிருத்தி தொடர்பான சேவைகள் மற்றும் தொழில் வழிகாட்டல்கள், திறன் அபிவிருத்தி தொடர்பான சேவைகள் மற்றும் தொழிற்கல்வி வழிகாட்டல்கள், சமூக சேவைகள் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள், முதியோர் தேசிய செயலகத்தினால் வழங்கப்படும் சேவைகள், வாகன புகைப் பரிசோதனை, காணி தொடர்பான சேவைகள், மருத்துவ முகாம் போன்ற சேவைகள் வழங்கப்பட்டன.

மேலும் பொதுமக்களுக்கு கண்புரை பரிசோதனை இடம்பெற்று இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்குதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதுடன், தென்னங்கன்றுகள், மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் என்பன வழங்கப்பட்டது
இதேவேளை பொதுமக்களுக்கான போதைப்பொருள் விழிப்புணர்வு நாடகமும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இவ் நடமாடும் சேவையில் வேலணை உதவி பிரதேச செயலாளர் திரு. கணேசமூர்த்தி பாா்த்தீபன் மாவட்டச் செயலக மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் சேவைகளைப் பெற்றுக் கொள்ள வந்த பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.