முல்லைத்தீவில் விடுதலைப் புலிகளின் தங்கம் மற்றும் ஆயுதங்களைத் தேடி படைத்தரப்பு மேற்கொண்ட அகழ்வில் எதுவும் கிடைக்காதால் அகழ்வு நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
முள்ளிவாய்க்கால் மேற்கில் விடுதலைப் புலிகள் அமைப்பால் தங்கம் மற்றும் ஆயுதங்கள் புதைக்கப்பட்டுள்ளன என்று பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் கடந்த 25ஆம் திகதி முதல் அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன் முன்னிலையில் இந்த அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
நேற்று மூன்றாவது நாளாக அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், படைத்தரப்பால் எதுவும் மீட்கப்படவில்லை. சுமார் 13 அடி ஆழம் வரையில் அகழப்பட்ட நிலையில், நீர் வர ஆரம்பித்தால் நீர் இறைக்கும் இயந்திரம் மூலம் நீர் வெளியேற்றப்பட்டது.
மாலை 5.30 மணிவரை அகழ்வுப் பணிகள் நடைபெற்ற நிலையில், அகழப்பட்ட இடத்தை மூடுமாறு நீதவான் உத்தரவிட்டார். அகழ்வுப் பணிகளும் இடைநிறுத்தப்பட்டன.