ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணப் பயணத்தின்போது, அவருக்கு எதிராகப் போராட்டங்களை நடத்துவதற்குத் தடை வழங்கக்கோரிய யாழ்ப்பாணம் பொலிஸாரின் மனுவை, யாழ்ப்பாணம் நீதிமன்றம் நிராகரித்தது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று(ஜனவரி 4) முதல் எதிர்வரும் 7 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த பல்வேறு நிகழ்வுகளிலும், சந்திப்புகளிலும் கலந்துகொள்ளவுள்ளார்.
இந்தநிலையில், அவர் யாழ்ப்பாணத்தில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் எதிர்ப்பு போராட்டங்களை நடத்துவற்குத் தடை விதிக்கவேண்டும் என்று யாழ்ப்பாணம் பொலிஸார் நேற்றுமுன்தினம் மனுவை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்திருந்தனர். 8 பேரின் பெயர்கள் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணைகள் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் நேற்று நடைபெற்றன. பிரதிவாதிகள் சார்பில் சட்டத்தரணி குருபரன் முன்னிலையாகியிருந்தார்.
சமர்ப்பணங்களை அடுத்து, தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்ற பொலிஸாரின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம், போராட்டங்கள் நடத்துவது மக்களுக்கான ஜனநாயக உரிமை என்றும், அதைத் தடுக்க முடியாது என்றும் குறிப்பிட்டது.
பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏதும் காணப்பட்டால், ஜனாதிபதிக்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கொண்டு அவரின் பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டு, பொலிஸாரின் மனுவை நீதவான் தள்ளுபடி செய்தார்.