சீன அரசாங்கத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட அரிசியை சமைத்து உண்ட பல சிறுவர்கள் ஒவ்வாமையால் பாதிக்கப்படுகின்றனர் என்று சமூக ஊடகங்களில் குற்றஞ்சாட்டப்படுகின்றது.
நாடு முழுவதும் இருந்து இந்தக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்ற நிலையில், வடக்கு மாகாணத்தில் கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலும் சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகின்றது.
இலங்கை அரசாங்கத்துக்கு சீன அரசாங்கத்தால் நன்கொடையாக ஒரு தொகை அரிசி அண்மையில் வழங்கப்பட்டது.
அந்த அரிசி தலா 10 கிலோ வீதம் பாடசாலை மாணவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. அந்த அரிசியை சமைத்து உண்டவர்களே பாதிப்புக்களை எதிர்நோக்குகின்றனர் என்று குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
சமிபாடு அடையாமை, வாந்தி போன்றவற்றால் சிறுவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்று சமூக ஊடகங்களில் பரவலான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
சமைத்த பின்னர் சோறு பசைத் தன்மையுடன் காணப்படுகின்றது என்றும் பலர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.
யாழ்ப்பாணம் வந்துள்ள சீன பிரதித் தூதுவர் ஹூ வொய்யிடம் இது தொடர்பில் கேட்டபோது, சமையல் செய்யும் முறையில்தான் பிரச்சினை என்று கூறினார்.
தமது நாட்டு அரிசியை மிருதுவான வெப்பநிலையில் சில நிமிடங்கள் வேக வைத்து எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.