யாழ்ப்பாண மாவட்டத்தில் “நாவற்குழி கொரோனா இடைத்தங்கல் பராமரிப்பு நிலையம்” இன்றைய தினம் (15) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
யாழ். மாவட்ட செயலகத்திற்கு சொந்தமான நெல் களஞ்சியத்திலேயே மேற்படி கொரோனா இடைத்தங்கல் பராமரிப்பு நிலையம் 200 கட்டில்களுடன் தயார்படுத்தப்பட்டுள்ளன. சுகாதார அமைச்சு, வடக்கு மாகாண சுகாதார பிரிவினரின் ஆலோசனையில் இராணுவத்தினரால் இந்த கொரோனா இடைத்தங்கல் முகாம் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன,
குறித்த இடைத்தங்கல் பராமரிப்பு நிலையமானது இன்றைய தினம் (15) யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மற்றும் அரச அதிபரினால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா
யாழ்.மாவட்ட மக்களின் செயற்பாடுகளாலேயே யாழில் தொற்று அதிகரித்ததாக தெரிவித்தார். அத்துடன்
யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த காலத்தை விட தற்பொழுது தொற்றுஅதிகரிக்கும் நிலை காணப்படுகின்றது.
யாழ்ப்பாண மாவட்டத்திலே சில ஆலயங்களில் சுகாதார பிரிவினரின் கட்டுப்பாடுகளை மீறி ஆலய உற்சவங்கள் நடத்தப்பட்டமையாலேயே தொற்றுநிலைமை அதிகரித்தது.
தற்போதும் சில இடங்களில் திருமண நிகழ்வுகள் வீடுகளில் சுகாதார பிரிவின் அனுமதி இல்லாமல் மேற்கொள்ளப்படுகின்றது எனவே மக்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் இந்தப் பயணத்தடை என்பது மக்களை தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காகவே எனவே பொதுமக்கள் இந்தப் பயணத்தடைக் காலத்திலாவது சுகாதாரப் பிரிவினரின் கட்டுப்பாடுகளுடன் வீடுகளில் இருப்பது மிகவும் சிறந்ததாகும்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் பொதுமக்கள் சுகாதார பிரிவினருடன் இணைந்து தொற்றுநோயை கட்டுப்படுத்தி யாழ். மாவட்டத்தில் தொற்றினை இல்லாதொழிக்க உதவ முன்வரவண்டும் எனவும் தெரிவித்தார்.