கண்டி மாவட்டத்தின் தெல்தெனிய – ரங்கல பகுதியை உலுக்கியுள்ள கொடூர சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காணாமல் போனதாக தேடப்பட்ட 22 வயதான ஆடைத்தொழிற்சாலை பெண் ஊழியர் ஒருவர் கொலை செய்யப்பட்டு காட்டில் ரகசியமாக புதைக்கப்பட்டிருந்தது காவல்துறையின் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
உயிரிழந்த யுவதி உடிஸ்பத்துவ ஹக்மன பகுதியைச் சேர்ந்த வீரசேகர முதியன்சேலாகே ஹீன்பிட்டகெதர வாசனா சந்தமாலி (வயது22) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சில நாட்களாக வீட்டிற்கு திரும்பாத மகளைத் தேடி தவித்த பெற்றோர் ரங்கல காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். இதையடுத்து காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
விசாரணைகளின் போது கிடைத்த முக்கிய தகவலின் அடிப்படையில் யுவதியின் காதலன் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையில், காதலியைக் கொலை செய்து காட்டில் புதைத்ததாக அவர் ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நீதிமன்ற உத்தரவின் பேரில் தெல்தெனிய நீதவான் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டார். பின்னர் காட்டுப் பகுதியில் புதைக்கப்பட்டிருந்த யுவதியின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.
மருத்துவ அறிக்கை கிடைத்த பின்னர் குற்றவாளிக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.