காங்சேன்துறை துறைமுகத்திற்கு எதிர்வரும் 25 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதி நவீன வசதிகளை கொண்ட, சொகுசுக் கப்பல் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக் கொண்டு வருகை தரவுள்ளது.
இச் சொகுசுக் கப்பல் ஊடாக வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்ற ஒழுங்குகள் மற்றும் வசதிகளை மேற்கொள்வதற்குரிய சிறப்பு கூட்டம் இன்று(ஓகஸ்ட் 22) தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்திற்கு யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(காணி) க.ஶ்ரீமோகனன், வலி வடக்கு பிரதேச சபை செயலாளர் உட்பட்ட வடக்கு மாகாண சுற்றுலாத் துறையுடன் தொடர்புபட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த சொகுசுக் கப்பலானது எதிர்வரும் 25 ஆம் திகதி தொடக்கம் தொடர்ச்சியாக அடுத்து வரும் மூன்று வெள்ளிக்கிழமையில், ஆயிரத்திற்கு மேற்பட்ட பயணிகளுடன் காங்கேசன்துறை துறைமுகத்தினை வந்தடையும் என்பதால், சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான சகல வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் இன்றைய கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் பல சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வதற்குரிய ஆக்கபூர்வமான முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.