இலங்கை தொடர்பில் கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்த கருத்துகளுக்கு இலங்கை அரசாங்கம் கடும் ஆட்சேபனையைத் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான கனடாத் தூதுவரை அழைத்து இந்த விடயம் தொடர்பில் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளோம் என்று இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள கனடா பிரதமர் 14 ஆண்டுகளுக்குப் பின்னர் துன்பகரமான விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புக்களை நினைவுகூருகின்றோம் என்று கூறியதுடன், முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இனப்படுகொலை உட்பட ஆயிரக்கணக்கான தமிழர்களின் உயிர்கள் இழக்கப்பட்டன. பலர் காணாமல் போனார்கள் – காயமடைந்தார்கள் – இடம்பெயர்ந்தார்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்தக் கருத்துக்கு இலங்கை அரசாங்கம் தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இவ்வாறான கருத்துக்கள் இலங்கையில் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க முயற்சிகளுக்கு உதவியாக அமையாது என்று இலங்கை வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.