வெடுக்குநாரிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய அழிப்பிற்கு எதிரான கண்டனப் போராட்டத்தின் முடிவில் ஜனாதிபதியிடம் சேர்ப்பதற்கான பேரணியின் பிரகடனம் ஜனாதிபதியின் செயலாளரிடம் கையளிக்கப்பட்டது.
குறித்த பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பல்லாண்டு காலமாக நாம் வழிபட்டு வந்த வெடுக்குநாரிமலை ஆதிசிவன் கோயில் இனந்தெரியாத விசமிகளால் இடித்தழிக்கப்பட்டுள்ளது.
மனித மாண்புக்கு இழுக்கை ஏற்படுத்தும் இந்தத் கொடுஞ்செயல் குறித்து தமிழர்களாகிய நாம் சொல்லொணா மன உளைச்சலுக்கும், அறச்சீற்றத்திற்கும் உள்ளாகியிருக்கிறோம்.
தமிழரின் இதுபோன்ற தொன்மப் பண்பாட்டைப் பறைசாற்றும் வழிபாட்டிட அழிப்புகள் அண்மை நாட்களாக அதிகரித்திருக்கின்றன. எனவே இத்தகைய அழிப்புக்களின் பின்னால் நன்கு திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிநிரல் ஒன்றிருப்பதாக ஐயுறுகின்றோம்.
இந்த தொடர் அழிப்புகள் குறித்து மரபுரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய தொல்லியல் திணைக்களம் அமைதிகாப்பதும் பெளத்த எச்சங்களை மாத்திரம் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதும்கூட தமிழர் மரபுரிமைகள் அழிப்பிற்கு துணைநிற்பதாகவே கருதுகின்றோம்.
உலகின் தொன்ம இனமொன்றாகிய தமிழர் மீதும் அவர்தம் வழிபாட்டு உரிமை மீதும் நிகழ்த்தப்படும் தொடர் அழிப்பும்கூட தமிழ் பண்பாட்டு இனப்படுகொலையே.
சைவர் தெய்வ சிலையுடைப்புக்களுக்கு காரணமானவர்களை கண்டுபிடிக்கவோ கைதுசெய்து தீர விசாரிக்கவோ முடியாத ஒரு நிலை இன்றும் காணப்படுகின்றது. இந்தப் பாராமுகம் குற்றச்செயல்களை அதிகரிக்கின்றது. எமது வழிபாட்டு உரிமையை அழிக்கும் செயற்பாடுகளுக்கு உற்சாகமூட்டுகிறது.
ஆகவே எமது வெடுக்குநாறிமலை ஆதிசிவன் கோயிலில் எழுந்தருளியிருந்த சிலைகளை அழித்தவர்கள் உடனடியாக் கைதுசெய்யப்படல் வேண்டும்.
நாம் மரபாக வழிபட்டு வந்த கடவுள்களின் சிலைகள் இதே இடத்தில மீள நிறுவப்படல் வேண்டும். இதுவரை காலமும் கோயில் நிர்வாகத்தினர் மீது தொல்லியல் திணைக்களத்தால் ஏற்படுத்தப்பட்ட நேரடி, மறைமுக இடையூறுகளின் காரணமாகவே எம்மால் நெறிப்படியான வழிபாடுகளை ஆற்றமுடியாமல் போனது.
இவ்வாறு எமது பிரசன்னம் ஆலயப் பகுதியில் குறைந்திருந்தபடியினாலேயே விசமிகள் துணிந்து நின்று தெய்வச் சிலைகளை அழித்திருக்கின்றனர். எனவே நாம் எஎவ்விதமான தடைகளுமின்றி எமது கோயிலுக்கு செல்லும் வழிபாடுகளில் ஈடுபடவும் ஆவண செய்யவேண்டும்.
இனிவருங்காலங்களில் இதுபோன்ற துர் செயல்கள் எமது கோயிலுக்கும், ஏனைய மத வழிபாட்டிடங்களுக்கும் ஏற்படாது என்கிற உத்தரவாதத்தினை அரசு தரவேண்டும் என்று பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.