மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள கடும் எரிபொருள் நெருக்கடி மற்றும் பொருளாதாரப் பின்னடைவைச் சமாளிக்க, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு அதிரடியான சிக்கன நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.
அதன்படி, அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் மற்றும் தன்னாட்சி அதிகாரமுடைய நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் சம்பளத்தில் 5% முதல் 30% வரை குறைப்பு செய்வதற்கு பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளார்.
அமைச்சரவை உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் ஆலோசகர்கள் ஆகியோரின் அடுத்த இரண்டு மாதங்களுக்கான சம்பளம் முழுமையாகப் பொது நல நிதிக்காகப் பயன்படுத்தப்படும்.
அரசு வாகனங்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடு 50% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த இரண்டு மாதங்களுக்கு 60% அரசு வாகனங்களைப் பயன்பாட்டிலிருந்து நீக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உத்தியோகபூர்வ பயணங்களாக வெளிநாடுகளுக்குச் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத பயணங்கள் எனில், அவர்கள் Economy வகுப்பிலேயே பயணிக்க வேண்டும்.
எரிபொருளைச் சேமிக்கும் நோக்கில் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை செய்யும் முறை ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே நிலவும் மோதல் காரணமாக உலகளவில் மசகு எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால் பாகிஸ்தான் இந்த நெருக்கடியைச் சந்தித்துள்ளது. இதன் மூலம் சேமிக்கப்படும் நிதி அனைத்தும் பொதுமக்களின் நிவாரணப் பணிகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என்று அந்நாட்டுப் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது