கச்சதீவில் அமைந்திருந்த அருள்மிகு கயற்கண்ணி உடனாய கச்சேச்சரநாதர் திருக்கோயிலை மீண்டும் திருப்பணி செய்வித்துக் கட்டிக் குடமுழுக்கு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ள இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க. சச்சிதானந்தன், அதன் மூ மாக இலங்கையில் வாழ்கின்ற சைவர்களின் துன்பங்கள் துயரங்கள் நீங்கும் எனவும் குறிப்பிட்டிருக்கின்றார்.
இது தொடர்பில் அவர் தெரிவித்திருப்பவையாவன:
400 ஆண்டுகளுக்கு முன்பு சங்கிலி மன்னனைத் தோற்கடிக்க மன்னார் தீவில் இருந்து இருமுனைத் தாக்குதலை மேற்கொண்டவன் போர்த்துக்கேயத் தளபதி பிலிப்பு டி ஒலிவரா. முதலில் தனது கடற்படையை அனுப்பினான். நெடுந்தீவுக்குப் போர்த்துக்கேயக் கடற்படை வந்தது. அங்கே சங்கிலிக்கு உதவியாக நிலைகொண்டிருந்த மலையாளத்துக்குஞ்சலியின் சுடற்படை போர்த்துக்கேயக் கடற்படையைத் தாக்கியது. பின்வாங்கிய போர்த்துகேயக் கடற்படை, கச்சதீவில் தங்கியது. அங்கே இருந்த அருள்மிகு கயற்கண்ணி உடனாய கச்சேச்சரநாதர் திருக்கோயிலை முற்றுமுழுதாக உடைத்தது. பின்வாங்கிய போர்த்துக்கேயக் கடற்படையைக் குஞ்சலி துரத்தினான். கச்சதீவு சென்றான். போர்த்துக்கேயக் கடற்படையை முற்றாக அழித்தான். போர்த்துக்கேய வீரர்களைச் சிறைப் பிடித்தான். நெடுந்தீவுக்குக் கொண்டு வந்தான்.
வைகாசி தேய்பிறை எட்டாம் நாள் யாழ்ப்பாணத்தில் சங்கிலியனைப் பிலிப்பு டி ஒலிவரா சிறைப் பிடித்ததும் நெடுந்தீவில் இருந்த குஞ்சலி வீரர் கடற்படை மலையாளத்துக்குப் புறப்பட்டது. நெடுந்தீவு போர்த்துக்கேயர் வசமானது. துப்பாக்கி முனையில் நெடுந்தீவில் வாழ்ந்த சைவர் சிலரைப் போர்த்துகேயர் கத்தோலிக்கராக மாற்றினர்.
கத்தோலிக்கத்துக்கு மாறாத சைவர்கள் கச்சதீவில் உடைந்து தரைமட்டமாகிய அருள்மிகு கயற்கண்ணி உடனாய கச்சேச்சரநாதர் திருக்கோயில் இருந்த இடத்தில் அண்ணமார் (சிவனின் சூலம்) திருமேனி வைத்து வழிபட்டு வருகின்றனர்.
நெடுந்தீவு மீனவருக்கும் தொண்டி தொடக்கம் இராமேஸ்வரம் வரை வாழும் தமிழக மீனவர்களுக்கும் இடையே திருமண உறவுகள் நெடுங்கால மரபு. என்வே நேர்த்திக் கடன்களை நிறை வேற்றத் தமிழகக்கரைகளில் இருந்தும் கச்சதீவுக்கு மீனவர் வருவர்.
கடந்த 100 ஆண்டுகளுக்குள் நெடுந்தீவுக் கத்தோலிக்க மீனவர் அந்தோனியார் சிலையை அமைத்து வழிபடத் தொடங்கினர். சைவ வழிபடு மரபுகள் தொய்வுற, கத்தோலிக்கத் திருவிழா மரபு அண்மையக் காலத்தில் தொடங்கியது. 400 ஆண்டுகளுக்கு
முன்பு வரை பத்தாயிரம் ஆண்டுகளுக்கும் கூடுதலாகக் கச்சதீவில் அமைந்திருந்த அருள்மிகு கயற்கண்ணி உடனாய கச்சேச்சரநாதர் திருக்கோயிலை மீண்டும் திருப்பணி செய்வித்துக் கட்டிக்குடமுழுக்கு நீராட்டினால் இலங்கையில் வாழ்கின்ற சைவர்களின் துன்பங்கள் துயரங்கள் நீங்கும்” என இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க. சச்சிதானந்தன் தெரிவித்திருக்கின்றார்.
(நனறி ஈழநாடு)