கிளிநொச்சியில் மலையாளபுரம்,புதுஐயங்கன்குளம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு காய்ச்சுபவர்களை கைது செய்ய சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்,நேற்று (செப்ரெம்பர் 14) காணாமல் போயிருந்த நிலையில் இன்று (செப்ரெம்பர் 15) அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கசிப்பு காய்ச்சும் தகவலறிந்து 3 பொலிஸார் சென்றபோது, கசிப்பு காய்ச்சியவர்கள் தப்பியோடினர். அவர்கள் குளத்துக்குள் இறங்கி தப்பியோட, பொலிஸ் உத்தியோகத்தர்களும் விரட்டிச் சென்றனர்.
சிறிது நேரத்தின் பின் 2 பொலிஸார் திரும்பி வந்தபோதும், ஒருவர் திரும்பி வரவில்லை, இந்நிலையில், நேற்று இரவு வரை இராணுவம், பொலிஸார் அந்தப் பகுதியில் பெரும் தேடுதலில் ஈடுபட்டனர்.
பொலிஸ் உத்தியோகத்தர் நீரில் மூழ்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் இன்று தேடுதல் நடத்தப்பட்டது. இதில் நீரில் மூழ்கிய நிலையில் பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் மீட்கப்பட்டது.
உயிரிழந்தவர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் மாத்தறை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய சதுரங்க எனும் பொலிஸ் உத்தியோகத்தர் ஆவார்.
சடலத்தை நீதவான் பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதனைகளைத் தொடர்ந்து உறவினர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.